Wednesday, February 24, 2010

கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் முஷ்ரிக்குகளுடன் கலந்து விடும் வரையிலும், என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் சிலைவணக்கத்தில் ஈடுபடும் வரையிலும் மறுமை நாள் ஏற்படாது''


அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள் - பாராட்டும் பத்திரிக்கை!

அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கும் கிள்ளை என்கிற கிராமத்தில் இருக்கிறது `ஸ்ரீ மகா மாரியம்மன்' கோயில். வேப்ப மரம், சூலாயுதம், சுற்றிலும் சிறுசிறு தெய்வங்களின் சிலைகள்... என கோயில் படுஅமர்க்களம்.



`உருவ வழிபாடு கூடாது என்பதுதான் இஸ்லாம் மதத்தின் அடிப்படை. ஆனால் முஸ்லிம் பெண்ணான நீங்கள் கோயில் கட்டி பூஜை நடத்துகிறீர்கள். ஏன்? எப்படி?'

``பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.

கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்'ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க'' என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார்.

பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?

``எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க'' என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு. ஏழ்மையான குடும்பம். கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கிய சொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் பஷீராவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதுண்டாம். அதைப் பற்றிக் கேட்டால், `` நான் பிறப்பால் முஸ்லிம்தான். ஆனால் அம்மன் மீது எனக்குப் பற்றுண்டு. உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை!'' என சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசும் பஷீரா, அம்மன் படத்தை தனது வலக்கையில் `பச்சை' குத்தி `அக்மார்க்' அம்மன் பக்தையாகவே மாறியிருக்கிறார். மனைவி கோயில் கட்டி வழிபாடு நடத்துவது பற்றி கணவர் ஜின்னா என்ன சொல்கிறார்? ``கோயில் கட்டியதிலிருந்து இன்றுவரை அவர் செய்கிற எந்த வேலைக்கும் நான் குறுக்கே நிற்பதில்லை'' என்கிறார்.

இந்தக் கோயில் பற்றி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ``மதநல்லிணக்கத்திற்கு இந்த அம்மன் கோயில் ஒரு உதாரணம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சொல்லப் போனால், பேரூராட்சி மூலம் கோயில் வளர்ச்சிக்கு முடிந்தவரை உதவி செய்கிறோம்!'' என்கிறார்.

``முஸ்லிம் பெண் கோயில் கட்டி கும்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கடவுளின் அருளைப் பெறுவதில் இதுதான் வழிபாட்டு முறை என்று எதையும் வரையறுக்க முடியாது!'' `கோரஸாகச் சொல்கிறார்கள். கிள்ளையைச் சேர்ந்த முகமது உசேனும், பாஸ்கரும்.

கோயிலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கும்பாபி ஷேகத்திற்கு நாள் குறித்திருக்கிறார் பஷீரா!

(நன்றி: குமுதம்)

0 comments: