Sunday, February 14, 2010

மௌலவிகளும் மரணச்சடங்குகளும்

அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும்

மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ்.

ஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள் கதாநாயகர்களாக இருப்பதை நிச்சயம் அவதானிப்பீர்கள். இதற்குக் காரணம் மௌலவி மார்க்க விபரம் தெரிந்தவர், நாம் அது பற்றி விபரமில்லாததவர் என்ற மனோ நிலைதானே! இப்போது மௌலவிகளின் விஷயத்திற்கு வருவோம்.

ஜனாஸாவிற்கு உழுச் செய்துவிடும் மௌலவிகள்

ஜனாஸாவை குளிப்பாட்டுவது ஒற்றைப்படையான அமைப்பில் இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதுடன், அவ்வாறு செய்கின்ற போது அதன் உழுவின் உறுப்புக்களைக் கொண்டு ஆரம்பியுங்கள் என்றும், அதன் இறுதியில் கற்பூரம் பொன்ற வாசனைத் திரவியங்களைக் கலந்து குளிப்பாட்டுமாறும் பணித்தார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஒரு ஜனாஸாவைக் குளிப்பாட்டுகின்ற போது மார்க்கத்தின் பெயரால் பல சடங்குகளைச் செய்து கொண்டிருந்த மௌலவிகள் கூட்டம் பொதுமக்கள் விழிப்பாக இருப்பதைக் கண்டு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. ஆனால் ஜனாஸாவுக்கு உழுச் செய்துவிடும் கலாச்சாரத்தை இன்னமும் விட்டபாடில்லை.

தொழுகை, தவாஃப் போன்ற கடமைகள் யாரின் மீது கடமையோ அவரே உழுச் செய்ய வேண்டும் என குர்ஆன் கட்டளை இடுவதை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்ற போது தொழுகைக்காக தயாராகிச் செல்கின்ற போது உழுச் செய்வது கடமை என்றுதான் கூறியுள்ளார்கள்.

கப்ரில் வைக்கப்படுவோரில் குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நபி (ஸல்) அவர்களால் விதிவிலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர ஏனைய அனைத்து முஸ்லிம்களும் குளிப்பாட்டப்பட வேண்டும் என்றுதான் பணித்தார்கள். மரணித்தவர்கள் கப்ரில் தொழுவதற்காக செல்வதில்லை. அது தொழுகை நிறைவேற்றும் இடமும் அல்ல. ஜனாஸா உழுவைக் கொண்டு என்ன செய்யப்போகின்றது என்பதைக் கூட சிந்திக்காமல் இவ்வாறு விளக்கம் கூறத்தலைப்பட்டுவது மார்க்க அறிஞர்களுக்கு உகந்ததல்ல. இவர்கள் உழுச் செய்துவிடும் கலாச்சாரத்தை எங்கிருந்து கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை.

சிலவேளை, புகாரி, முஸ்லிமின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனப் (ரழி) அவர்களைக் குளிப்பாட்டுகின்ற போது

ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْها

அவரது வலது பக்கங்களைக் கொண்டும், உழுவின் இடங்களைக் கொண்டும் ஆரம்பியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் கூறிய செய்தியை முன் வைத்துக் கூற முற்படலாம்.

அதில் உழுவின் இடத்தைக் கொண்டு ஆரம்பியுங்கள் என்றுதான் இடம் பெற்றுள்ளதே தவிர உழுச் செய்துவிடுங்கள் என இடம் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அது ஹதீஸுக்கு நேர் முரணனா விளக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாஸாவிற்கு தயம்மும்

பொதுவாக குளிப்பாட்ட முடியாது என்ற நிலையிலுள்ள ஜனாஸாக்களுக்கு தயம்மத்தின் சட்டத்தை இவர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள்.

சில ஜனாஸாக்களைக் குளிப்பாட்ட முடியாது என்று தெரிந்து கொண்டும் அதை தயம்மும் செய்து அடக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கின்ற மௌலவிகளை பார்க்கின்றோம். இதற்கு எங்கிருந்து ஆதாரம் பெற்றனரோ தெரியவில்லை.

அவன் உங்கள் மார்க்கத்தில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்த வில்லை (அல்ஹஜ்: 78வது வசனம்). என அல்லாஹ் அல்குர்ஆனில் அறிவிப்புச் செய்த பின்னரும் ஜனாஸாவிற்கு தயம்மும் செய்ய வேண்டும் என்கின்ற தத்துவம் என்கிருந்து பெற்றார்களோ தெரயவில்லை.

எந்த ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கும் அப்பால் அல்லாஹ் அதைக் கஷ்டப்படுடத்துவதில்லை என்ற வசனத்தை இவர்கள் படிக்கவில்லையா? அந்த வசனம் உயிருடன் இருக்கின்ற மனிதர்களை அல்லாஹ் சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்றிருக்கின்ற போது மரணித்தவர்களை சிரமப்படுத்தும் மௌட்டீக தத்துவத்தை எங்கிரந்து பெற்றனரோ தெரியவில்லை.

عَنْ أَنَسٍ قَالَ كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ نُهِينَا عَنْ التَّكَلُّفِ – صحيح البخاري

நாம் உமர் (ரழி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்த போதுசிரமத்தை நாமாக ஏற்படுத்திக் கொள்வதில் இருந்தும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம் என கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் புகாரியின் அறிவிப்பை இவர்கள் படிக்கவில்லையா?

ஏழு வருடத்தில் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டோம், உங்களுக்கு அரபு நூற்களின் ஒரு எழுத்தையேனும் விட்டுவைக்கவில்லை என பொதுமக்களை ஏமாற்றும் இந்தப் பேர்வழிகள் இஸ்லாத்தை உண்மையில் சரியாகப்படிக்கவில்லை என்பதை இன்னும் சில செய்திகளைக் கொண்டு உங்களுக்கு தெளிவைத்தர விரும்புகின்றோம்.

ஜனாஸா வீட்டில் ஃபாத்திஹா

ஜனாஸாவைக் குளிப்பாட்டி, கபன் செய்த பின்னர் தொழுகைக்காக எடுத்துச் செல்ல வேண்டும். இந்த முல்லாக்கள் ஃபாத்திஹா என்ற பெயரில் ஓதும் துஆவை இன்னும் தவிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று, சில சில்லறைக்காசுகளுக்காகக் அல்லாஹ்வைப்பற்றி அச்சமில்லாத மௌலவிகளால் கொண்டுவரப்பட்ட புதிய வழிமுறை என்பதை பொது மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளதை ஏழு வருடத்தில் ஓதிய எந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்டனரோ தெரியவில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எத்தனையோ ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கேனும் இந்த ஃபாத்திஹா முறை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் உண்டா, அவ்வாறு இவர்களால் சமர்பிக்கத்தான் முடியுமா?

அல்லாஹ்வின் கட்டளை, நபி (ஸல்) அவர்களின் வழிமுறைதான் தீன் எனக் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்ற வாசகங்களைப் பள்ளிகள் தோறும் பரப்பும் கூட்டத்தின் நிலையும் அதோ கதிதான். அவர்களின் ஆலிம்கள்தான் பித்அத்களைச் செய்வதில் முன்னணி வீரர்கள். அரபியில் செய்கின்ற பித்அத்துக்களை இவர்கள் தமிழில் ஓதிச் செய்கின்றார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

இவர்களில் பெரும்பாலானோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஐடின்டி மௌலவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் தாயின் சபையின் ஆலிம்களின் நிலையும் இதை ஒத்ததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு முன் அல்லது அடக்கம் செய்து விட்டு குர்ஆன் ஓதுவது கூடுமா? என்ற கேள்வியை ஷாஃபி மத்ஹபிடம் முன்வைத்தால் அது கூடாது என்கிறது இது பற்றி இங்கே கவனியுங்கள்.

وأما ما يفعله بعض الجهلة من القراءة على الجنازة في دمشق’ وغيرها من القراءة بالتمطيط ، وإخراج الكلام عن مواضعه فحرام باجماع العلماء

டமஸ்கஸ் நகரத்திலும், மற்றும் அதல்லாத பிரதேசங்களிலும் ஜனாஸாவை முன்வைத்துக் கொண்டு சில அறிவீனர்கள் (குர்ஆனை) நீட்டி ஓதியும், பேச்சை (குர்-ஆனை) அதன் உரிய இடங்களிலிருந்து நகர்த்தியும் செய்யும் செயல் அறிஞர்களின்இஜ்மா’ -ஏகோபித்த- முடிவின் பிரகாரம் ஹராமாகும். இமாம் நவவீ (ரஹ்), ஆதார நூல்: அல் அத்கார். பக்கம்: 203)

ஜனாஸாவை முன் வைத்துக் கொண்டு குர்ஆனையே ஓதுவது கூடாது என்றால் அதன் முன் நிலையில்ஹழ்ராவைப்பது, ‘ராதிபுநடத்துவதுபாத்திஹாக்கள்ஓதுவது என செய்யப்படும் மார்க்கத்தில் இல்லாத கிரியைகள் எவ்வாறு அனுமதிக்கப்படும் என சிந்தியுங்கள்.

மௌலவிகளும், ஷஹாதாவும்

இது பற்றியும் இங்கு கவனம் செலுத்துவது பொருத்தமானதாகும். ஜனாஸாவை வீட்டில் இருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்ல மக்கள் நகர ஆரம்பிக்கின்ற போது தலைமை மதகுரு வருபவர்கூலூ இன்னாலில்லாஹ், வஇன்னா இலைஹி ராஜிஊனஷ்ஷஹாதாஎன கூறுவார், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் எனத் தொடங்க, அதைத் தொடர்ந்து பின்வரும் விபமற்ற சீடர்கள்அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு …. எனத் தொடர்வர்.

அல்லாஹ்வின் உதவியால் இந்த பித்அத்தும் நன்றாகவே குறைந்துவிட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்திதான். சில கிழடுகள் மாத்திரம் புறுபுறுத்துக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டது. மக்கள் விபரமாகிவிட்டனர்.

இதன் பொருளைக் கவனித்தால் சிரிப்பீர்கள். இன்னாலில்லாஹ், வஇன்னா இலைஹிராஜஊன் என்று கூறுங்கள். ஷஹாதா இதற்கு எப்படி பொருள் படுத்துவது என்று அவர்களிடம் கேட்கே வேண்டும்.

இன்னாலில்லாஹ் துஆச் சொல்லும் நேரமா இது ! கலிமாச்சொல்லிக்கொண்டு செல்லும் நேரமா இது என்று கேட்டால் கிறுக்கத்தனமாக விளக்கம் தருவார்கள் இந்த அல்லாமாக்கள். அதேவேளை!

ஷாபிஈ மத்ஹப் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கம் அறிஞர் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இது கூடாத ஒரு காரியம் என பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

قال رحمه الله: واعلم أن الصواب، والمختار، وما كان عليه السلف رضي الله عنهم السكوت في حالة السير مع الجنازة. فلا يرفع صوت، بقراءة، ولاذكر، ولاغير ذلك

அறிந்து கொள்! சரியானதும், தேர்வு செய்யப்பட்டதும். முன்னோர்களின் வழிமுறையும் (அல்லாஹ் அம் மக்களை பொருந்திக் கொள்வானாக!) என்ன வெனில் ஜனாஸாவுடன் செல்லும் வேளையில் மௌனமாகச் செல்வதுதான். (பார்க்க: அல் அத்கார்: பக்கம்: 203) அதற்கான காரணத்தை முன்வைக்கின்ற போது இமாம் மேற்படி நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள்.

والحكمة فيه ظاهرة، وهي أنه أسكن لخاطره، وأجمع لفكره فيما يتعلق بالجنازة وهو المطلوب في هذا الحال، وهو الحق.

அதில் காணப்படும்ஹிக்மாநுட்பம் வெளிப்படையானதாகும்! அதாவது அது (அதனை சுமந்து செல்பவனின்) மனக் கவலைக்கு அமைதி வழங்கும், மேலும் ஜனாஸாவுடன் தொடர்புள்ளவற்றில் அவனது சிந்தனையை ஒருமுகப்படுத்தும் இந்நிலையில் அதுவே வேண்டப்பட்டதுமாகும்; அதுதான் உண்மையும் கூட.
ஆதாரம் : (அல்- அத்கார்: பக்கம்: 203)

قال النووي رحمه الله في المجموع
المستحب خفض الصوت في السير بالجنازة ومعها. فلايشتغلون بشيء غير الفكر فيما هي لاقية’ وصائرة إليه.

ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போதும், அதனுடன் இருக்கும் போதும் சப்தத்தை தாழ்த்திக் கொள்வது முஸ்தஹப்பாகும். அது எதை சந்திக்கவிருக்கின்றதோ, எதன் பக்கம் அது செல்லவிருக்கின்றதோ அதைப்பற்றிய சிந்தனையில் தவிர வேறு ஒன்றிலும் அவர்கள் (நல்லடக்கம் செய்வோர்) ஈடுபடமாட்டார்கள். (அல்மஜ்மூஉ பாகம்: 5. பக்கம்: 282 ஆசிரியர் இமாம் நவவி ரஹ் அவர்கள்)

இதை மாத்திரமா மார்க்கத்தின் பெயரால் செய்கின்றார்கள் இந்த முல்லாக்கள், ஜனாஸாவை பள்ளியில் வைத்துக் கொண்டு குல் சூராக்களை ஓதிக் கொண்டிருப்பார்கள், இதை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலில் இருந்துதான் செய்கின்றார்களா என்றால் இல்லை, ஊரில் எவனோ ஒருவன் எந்தக்காலத்திலோ அரங்கேற்றிய இந்த அனாச்சாரத்தை இவர்களும் செய்கின்றார்கள். பின்னர் இவர்கள் ஃபாத்திஹாக்கள் போடுவதற்குத் தவறுவதும் இல்லை.

ஜுப்பாக்களும், தலைப்பாகைகளும் அணிந்த வெளித்தோற்ற மகான்களும் இந்த பிஅத்தை செய்யத்தான் செய்கின்றனர். நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளாக சமூகத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்களின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.

மண்ணறையிலும் தொடரும் ஃபாத்திஹாக்கள்

மண்ணறையிலும் மவ்லவிகள் ஃபாத்திஹா ஓத வெட்கப்படுவதில்லை. மரணத்துடன் தொடர்பான ஃபாத்திஹாக்களை மக்கள் கேலியாகப் பேசிக் கொள்கின்றனர். ஆனால் அவற்றை ஏழு வருடம் படித்த மவ்லவி அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார். இவருக்கும் தன்னை நபிமார்களின் வாரிசுகளில் ஒருவர் என் இணைத்துப் பேசிக் கொள்வதில் பெருமைதான்.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பிழைபொறுக்க வேண்டுங்கள், அவர் தற்போது விசாரிக்கப்படுகின்றார் (புகாரி, முஸ்லிம்) என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில் பல சகோதரர்கள் இன்று மரணித்தவர்களுக்காக மண்ணறையில் தனியாகப் பிரார்த்திக்கும் அழகிய வழிமுறையை செய்கின்றனர். இதைப்பார்த்தாவது இந்த மௌலவிகள் திருந்துவார்களாயின் சமுதாயம் சீர்பெறுவது வெகுவிரைவில் என்பது உறுதி.

மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி ஹத்யா செய்யும் மௌலவிகள்

மௌலவிகளில் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதை நாம் அறிவோம். முஸ்லிம் செல்வந்தர்களைப் போன்று நன்கொடைகள் கொடுக்க அவர்களிடம் வசதிவாய்ப்புக்கள் இல்லை. அதனாலோ, என்னவோ மரணித்தவர்களுக்காக ஹத்யாச் செய்யும் வழக்கை சமூகத்தில் அறிமுகப்படுடுத்தியுள்ளார்கள் போலும், இதைக் கூட பணம் பெற்றுக் கொண்டுதான் செய்கின்றார்கள்.

மரணித்தவருக்காக ஓதப்படும் குர் ஆனின் நன்மை அவர்களைச் சென்றடையாது. என்ற கருத்தினை ஷாஃபிஈ மத்ஹபின் பிரபலமான அறிஞர்களில் ஒருவரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

وأما قراءة القرآن فالمشهور من مذهب الشافعي أنه لا يصل ثوابها إلى الميت.
مقدمة شرح صحيح مسلم

மரணித்தவருக்காக குர்ஆன் ஓதுவதால், நன்மை மரணித்தவரைச் சென்றடையாது என்பது ஷாபிஈ மத்ஹபின் பிரபல்யமான கருத்தாகும். பார்க்க முகத்திமது முஸ்லிம் (பா: 01 பக்கம்:-48) தொடரந்து கூறுகின்ற போது: எனினும் இக்கருத்திற்குச் சிலர் முரண்படுகின்றனர் எனக்குறிப்பிட்ட பின்னர்

وكل هذه المذاهب ضعيفة, ودليلهم القياس على الدعاء، والصدقة، والحج. فإنها تصل بالاجماع,

இக்கருத்தினை ஆதரிக்கும் அனைத்து மத்ஹபுகளும் பலவீனமான மத்ஹபுகளாகும். இவர்கள் துஆ, ஸதகா, ஹஜ் ஆகிய வணக்கங்களைக் கொண்டுகியாஸ்அடிப்படையில் ஆதாரம் கொள்கின்றனர். இவைகள் நிச்சயமாக (ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதால்) அவைகள் சென்றடையும் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எனத் தொடரும் இமாம் நவவி அவர்கள்

ودليل الشافعي وموافقيه قول الله تعالى : وأن ليس للإنسان إلا ما سعى .
سورة النجم
وقول النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به أو ولد صالح يدعو له.

இமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களைப் பின்பற்றியோரும் தமது கூற்றுக்குச் சான்றாக

ஒரு மனிதன் தான் செய்வதையே (மறுமையில்) பெற்றுக் கொள்வான்என்ற (53:39) திருமறை வசனத்தையும்மனிதன் மரணித்துவிட்டால் நிலையான தர்மம, பிறர் பயன் பெறும் கல்வி, அவருக்காகப் பிரார்த்தனை புரியும் ஸாலிஹான குழந்தை ஆகிய மூன்று காரியங்களைத் தவிர அவனது அனைத்துக் காரியங்களும் தடைப்பட்டு விடுகின்றன (முஸ்லிம் எண்: 4196) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய நபி மொழியினையும் ஆதாரமாகக் கொள்கின்றனர். எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் ஷாபிஈ (ரஹ்), இமாம் நவவி போன்றோர் மட்டும் இதனைக் கூறவில்லை. மாற்றமாக ஷாபிஈ மத்ஹப் சார்ந்த அறிஞர் இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்களும் இதனை தனது (பதாவா அல் இஸ்) ‘இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாமின் மார்க்கத் தீர்ப்புக்கள்என்ற நூலில் பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள்.

قال رحمه الله:
لا يجوز إهداء شيء من القرآن والعبادات إذ ليس لنا أن نتصرف في ثواب الأعمال بالهبات كما نتصرف في الأموال بالتبرعات
فتاوى عز ابن عبد السلام

குர்ஆனில் இருந்தோ, வணக்கங்களிலிருந்தோ எந்த ஒரு சிறு அம்சத்தைக் கூட (பிறருக்கு) அன்பளிப்பு (ஹத்யா) செய்வது ஆகுமானதல்ல. ஏனெனில், நாம் செல்வத்திலிருந்து நன்கொடைகள் கொடுப்பது (அனுமதிக்கப்பட்டது) போன்று அமல்களின் கூலியில் இருந்து பிரதியீடு பண்ணுவதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக் குறிப்பிடுகின்றார்கள். (ஆதார நூல்: ஃபதாவா இஸ்ஸூ பின் அப்திஸ்ஸலாம். பக்கம். 97)

وسئل العز بن العبد السلام عن ثواب القراءة المهدي هل يصل أم لا فأجاب بقوله: ‘ ثواب القراءة مقصورة على القارئ ولا يصل إلى غيره. وقال: والعحب في الناس من يثبت ذلك بالمنامات وليست المنامات من الحجج الشرعيةالتي تثبت به الأحكام.
فتاوى بن عبد السلام

மேலும், இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம் அவர்களிடம் மரணித்தவர்கள் பெயரில் ஹத்யா செய்யப்படும் ஓதல்களின் (நன்மை) நிலை பற்றி அது மரணித்த மனிதரை சென்றடையுமா? அடையாதா? எனக் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறிய பதிலாவது:-

ஓதலுக்கான நன்மை ஓதியவர் மீதே மட்டிடப்பட்டதாகும். பிறரை அதன் நன்மை சென்றடையாது. எனக் கூறிவிட்டு, சில மனிதர்கள் தாம் காணும் கனவுகள் மூலம் இதனை நிரூபித்து (நன்மை சேர்ப்பிக்க) முனைவது அதிர்ச்சியினைத் தருகின்றது.

கனவுகளால் மார்க்கச் சட்டங்களை நிலை பெறச் செய்ய முடியாது எனக் கூறினார்கள். எனவே ஹதீஸ்களில் அனுமதியளிக்கபட்டுள்ளவைகளைத் தவிர மரணித்தவருக்காகச் செய்யப்படும்; வேறு எந்த நன்மையும அவரைச் சென்றடையாது. என்பதே முடிவாகும். (ஆதாரம் ஃபதாவா இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம். பக்கம் : 96 )

இதன் மூலம் மரணித்தவர்கள் தமது வீட்டார்களிடம் கனவில் வந்து எனக்காக நீங்கள் கத்தம் கொடுங்கள், கபுர் கட்டுங்கள் எனக் கூறுவதை மார்க்கமாகக் கொள்ள முடியாது என்பதையும் அறிய முடிகின்றது

இது போன்ற மார்க்கத் தீர்ப்பையாவது இவர்கள் ஏற்று செயல்படுத்தாவிட்டாலும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு எதிராக அபூஜஹ்ல், உத்பாக்களைப் போன்று செயல்படாமல் இருந்தால் எவ்வளவு சிறப்பு.

நன்றி islamkalvi.com

0 comments: