நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Monday, May 30, 2011

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? -


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6tG_-DbKRcshkdgDm_y4TtahvF3U74wAu-LBsDcs_TfjcW2jVAB5P4YbVeays0Bex5jUj5WBxSqAHSVPijN6auJ1YWH3n5wfD29sG3gbbMmCOOEfSRw0AoAuizil3O9tiPjXRXjADink/s1600/Bismillah_2.JPG
அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 

அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

பதிவிற்குள் செல்லும்முன்,  நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.

பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.

பதிவிற்குள் செல்வோம். 

திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர். 

அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது. 

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1). 

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது. 

---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது, 
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்' 
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்). 

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு, 
'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன். 
என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்! 

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :) 

அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். 
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது' 
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள். 

மேலும், 
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது' 
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள். 

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன. 

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது. 

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேசமுடியாத என் பெற்றோர், வேறு வழியின்றி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை. 

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :) 

குறிப்பு: 
மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள். 

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன். 

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!(9)

அன்பு சகோதரி.
--------------------------

அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள். 
  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும், 
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,    
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும், 
இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக... 

இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன். 

Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன், 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.

9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்கின்றோமல்லவா, அதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.  


Saturday, May 14, 2011

அத்தியாயம் கியாமா(மறுமை நாள்)


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiql1kXPPsbn_Pj5ngIMXD4r5WuP13T_EZg8oExM_zPyGn0z9HOR_L1LsuYyef0RBQH95iQmTpN4a0g4Hckv0-4LmCHlx3kSKxVGAh2oRUUisBx3jfA7BMfAAO8WiU_-pEATt6cEUCrk2U/s1600/Bismillah_2.JPG
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அத்தியாயம் கியாமா (மறுமை நாள்)




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (75:1)

وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (75:2)

أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (75:3)

بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ

அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (75:4)

بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். (75:5)

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ

"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். (75:6)

فَإِذَا بَرِقَ الْبَصَرُ

ஆகவே, பார்வையும் மழுங்கி- (75:7)

وَخَسَفَ الْقَمَرُ

சந்திரன் ஒளியும் மங்கி- (75:8)

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் . (75:9)

يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ

அந்நாளில் "(தப்பித்துக் கெள;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். (75:10)

كَلَّا لَا وَزَرَ

"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). (75:11)

إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. (75:12)

يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (75:13)

بَلِ الْإِنسَانُ عَلَى نَفْسِهِ بَصِيرَةٌ

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். (75:14)

وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! (75:15)

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். (75:16)

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. (75:17)

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். (75:18)

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:19)

كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். (75:20)

وَتَذَرُونَ الْآخِرَةَ

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். (75:21)

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். (75:22)

إِلَى رَبِّهَا نَاظِرَةٌ

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். (75:23)

وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். (75:24)

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். (75:25)

كَلَّا إِذَا بَلَغَتْ التَّرَاقِيَ

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், (75:26)

وَقِيلَ مَنْ رَاقٍ

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. (75:27)

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். (75:28)

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். (75:29)

إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. (75:30)

فَلَا صَدَّقَ وَلَا صَلَّى

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. (75:31)

وَلَكِن كَذَّبَ وَتَوَلَّى

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். (75:32)

ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِهِ يَتَمَطَّى

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். (75:33)

أَوْلَى لَكَ فَأَوْلَى

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! (75:34)

ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். (75:35)

أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? (75:36)

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75:37)

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى

பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். (75:38)

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். (75:39)

أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? (75:40)


Saturday, May 7, 2011

இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)




நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.  

உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக, முஸ்லிம்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள் இங்கே பதிக்கப்படும்.  

முஸ்லிமல்லாதவர்கள் இந்த அற்புத மனிதரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த பகுதி அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்).

(நன்றி: ரீட்இஸ்லாம், வழிகாட்டிஇஸ்லாம்குரல்)
1. ‘ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் ‘புர்தா (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்' என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என மக்களிடம் கேட்டார்கள். அப்போது மக்கள், ‘அது சால்வை' என்றனர். அப்போது ஸஹ்ல்(ரலி), ‘அது கரை வைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்' என்று கூறினார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) அப்போது அந்தப் பெண்மணி, ‘இதனை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.

பிறகு அவர்கள் அதை அணிந்(து கொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை எனக்கு அணிவித்து விடுங்களேன் என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘சரி' என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்று விட்டபோது, அந்தத் தோழரிடம் அவரின் நண்பர்கள் ‘நீர் செய்தது அழகல்ல, நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் தான் அதைப் பெற்றுக் கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே' என்று கூறி அவரைக் கண்டித்தனர். அதற்கு அவர் ‘நபி(ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட சுபிட்சத்தை (பரக்கத்தை) அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும் போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை கேட்டேன்)' என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்).
ஆதாரம்: புகாரி.

2. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்? என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புகாரி.
3. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.
 
சென்றவை:  -----------------
1. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புகாரி.

2. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.

3. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புகாரி.

-------------
1. ஹிந்த் பின்த்து உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).

ஆதாரம்: புகாரி.


2. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள்.


மக்கள், ‘பாதையின் உரிமை என்ன? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்' என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).

ஆதாரம்: புகாரி.


3. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).

ஆதாரம்: புகாரி.



4.  "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்"- நபி (ஸல்) 


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம்


5. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)"

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி)
ஆதாரம்: புகாரி. 

------------------------

1. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும் என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்) என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.


அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)

ஆதாரம்: புகாரி.



2. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், "நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு

நூல்: முஸ்லிம்.


3. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்"

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக் கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ.

-----------------------
1. நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஆதாரம்: முஅத்தா.

2. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) 
ஆதாரம்: புகாரி

3. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்! என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்? என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும் என்று கூறினார்கள். 

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஆதாரம்: அபூதாவூத்.  

4. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி 

5. ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.

“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவர்கள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
 
by bro. aashiq ahamed