Friday, April 30, 2010

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

 ஈசா (அலை) அவர்களின் வரலாறு UPDATED

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது.  (12:111)

இறைதூதர் ஈசா (அலை) அவர்கள் (இயேசு - jesus) மர்யமின் மைந்தராவார். ஆண் துணையின்றி அற்புதமான முறையில் அன்னை மர்யம் பெற்றெடுத்தார். பாலஸ்தீன் உள்ள நாசிரா - NAZARETH என்னும் ஊரில் பிறந்த இவர் மர்யமின் மைந்தர் ஈசா என்றே அழைக்கப்பட்டார்.


மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

பொதுவாக ஒருவரை அவருடைய தந்தையோடு இணைத்து கூறுவதே மரபு, ஆனால் ஈசா (அலை) அவர்களுக்குத் தந்தை இல்லாததால் அவருடைய தாயோடு இணைத்து ஈசா பின் மர்யம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஒருவருக்கு இவர்தான் தாய் என்பதற்கு உலகமே சாட்சியாக இருக்கும். ஆனால் இவர்தான் தந்தை என்பதற்கு அவரது தாய் மாத்திரம்தான் சாட்சியாக இருக்க முடியும். எனவே தான் அதனை நாம் உறுதி செய்யும் பொருட்டு நமது பேருக்கு முன்னால் நமது தாயார் யாரை தந்தையென நமக்கும், உலகுக்கும் இனம் காட்டினாரோ அவரது பெயரின் முதல் எழுத்தை எழுதுகிறோம். இது நமது தாயாரை கண்ணியப்படுத்தவும், உண்மைப்படுத்தவும் உதவுகிற ஒரு வழியாகும். ஆனால் புரட்சி என்கின்ற பெயரில் தன் தகப்பன் மேலுள்ள வெறுப்பின் காரணத்தினால் அவரை இழிவுப்படுத்த வேண்டி தாயின் பெயரை தனது முதற் பெயராக வைத்தல் என்பது இன்று நாகரீகமாக கருதப்பட்டுவருகிறது. இப்படிப்பட்டவர்கள் தனது தாயைத்தான் இழிவுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை மறந்துவிட்டார்கள்.

ஈசா (அலை) அவர்கள் அவரது தாயின் பெயரால் அழைக்கப்பட்டார்கள் என்றால் அவரது நிலைமை வேறு. உலக நியதிக்கு மாறாக தந்தையின்றி அற்புதமாக பிறந்தவர் ஈசா (அலை) அவர்கள், அவரது தாய் கண்ணியமானவர் என்பதை தனது தொட்டில் பருவத்திலேயே பேசி உலகத்திற்கு புரியவைத்தார். திருமறையே இவரது தாயின் கண்ணியத்திற்கு உலகம் அழியும் காலம் வரை தகுந்த சாட்சியாக விளங்குகிறது. 

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.  (66:12)

அற்புதப் பிறப்பு

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,  (19:16)

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.  (19:17)

(அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.  (19:18)

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.  (19:19)

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.  (19:20)

"அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார்.  (19:21)

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.  (19:22)

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார்.  (19:23)

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான்.  (19:24)

"இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.  (19:25)

"ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்.  (19:26)

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"  (19:27)

"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).  (19:28)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.  (19:29)

"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.  (19:30)

"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.  (19:31)

"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.  (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.  (19:33)

இத்தகையவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).  (19:34)

அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.  (19:35)

"நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).  (19:36)

தொட்டிலில் உரையாடியவர்
நபி ஈசா (அலை) அவர்கள் தொட்டில் பருவத்தில் மக்களிடம் உரையாடியதைப் போன்று யூத மத குருவான ஜுரைஜ் என்பாரின் காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தையும், இஸ்ரவேலர்களிலுள்ள ஒரு பெண்ணின் குழந்தையும் தொட்டில் பருவத்திலேயே மக்களிடம் உரையாடியுள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை.
(ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். 
(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!" என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்" என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார். 

(மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு" என் மகனை இவனைப் போல் ஆக்கு" என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே" என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே" என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு" என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதிலளித்தது. புஹாரி 3436  

ஈசா (அலை) அவர்களின் தோற்றம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" 
(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.   புஹாரி 3438

ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்
(முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (5:46)

இயேசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹுவால் அருளப்பட்ட இன்ஜீல் இப்போதுள்ள பைபிள் அல்ல. இது இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய செய்தியாகும். இன்ஜீல் என்பது இயேசு எனும் ஈஸா நபியிடம் அல்லாஹ் உரையாடியதாகும்.

பைபிள் புதிய ஏற்பாட்டிலும் "ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை இயேசு பிரசங்கித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. அந்த ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் இன்று கிருஸ்துவர்களிடம் இல்லை. "இன்ஜீலுக்குரியவர்கள் அதன்படி தீர்ப்பளிக்கட்டும்" (அல் குர்ஆன் -5:47) என்று குர்ஆன் கூறுவதால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இன்ஜீல் இருந்ததை அறியலாம். அதன் பிறகு அது மறைக்கப்பட்டுவிட்டது என்றே கருத வேண்டும்.

மேலும் பைபளில் உள்ள குளறுபடியை காண்க கீழே சொடுக்காவும்.
இதுதான் பைபிள்
கிறிஸ்தவம் பார்வை
இஸ்லாமிய இணைய பேரவை
அபூமுஹை
ஏகத்துவம்
முஹம்மத் அர்ஷாத் அல் அதரி பிளாக்
தமிழ் பைபிள் பாருங்க

இஸ்ரவேலர்களின் தூதர் ஈஸா (அலை)
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்கள் சமுதாயத்திற்கு மாத்திரமே தூதராக அனுப்பப்பட்டார்கள். இவருக்கு பிறகு உலகம் அழியும் காலம் வரை உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.  (61:6)

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அஹ்மத் என்ற பெயரும் உண்டு.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆம்ப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். புகாரி 3532

தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததை யூதர்கள் நன்கு அறிவார்கள்.


பைபிளில் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவிப்பை பார்க்க கீழே சொடுக்கவும்.

மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதினா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர். முஹம்மது நபி வந்த போது அவர்களை முதலில் ஏற்ப்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேரிவர்களின் வாரிசுகளோ, முஹம்மது நபி வந்த போது அவர்களை இறைத்தூதர் என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்குப் போய்விடும் என்பதே அதற்குக் காரணம்.

இன்றைய கிருத்துவ சமுதாயமோ இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்ட இயேசு என்ற ஈஸா (அலை) அவர்கள் உலகமக்கள் அனைவர்க்கும் அனுப்பப்பட்டதை போன்று இஸ்ரவேலர் அல்லாதவர்களையும் இயேசுவை நோக்கி வருமாறு அழைக்கின்றார்கள். இயேசு இஸ்ரவேலர்களுக்கு மட்டும்தான் அனுப்பபட்டார் என்பதற்கு கிருத்துவர்கள் இன்று தங்களது வேதமாக நம்பும் பைபிளிலும் சான்று உள்ளது.

….இஸ்ராயீலின் மக்களுக்கு (இயேசுவை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் கூறினான்)’- அல் குர்ஆன்(3:49)

இந்த அல் குர்ஆன் வசனத்தினை பின் வரும் பைபிள் வசனங்கள் தெள்ளத் தெளிவாக உண்மைப் படுத்துகின்றன. இதோ உங்கள் கவனத்திற்கு: -

‘காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல வென்றார்.’ – மத்தேயு (15:24)
‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ – மாற்கு (12:29)

ஆக இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் ஈஸா (அலை) அவர்களும் ஒருவர். இவர் அனுப்பப்பட்ட காரணங்களில் ஒன்று இஸ்ரவேலர்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டு இருந்த சிலவற்றை இறைவனின் அனுமதியின் பேரில் இவர் ஆகுமாக்கினார்.


"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்."  (3:50)

"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."  (3:51)
ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள்
கிருத்துவ சமுதாயம் இயேசு அவர்களுக்கு பதினோரு சீடர்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர்  தான் இயேசுவை எதிரிகளிடம் காட்டிகொடுத்ததாகவும் கூறுகிறது. ஆனால் இஸ்லாமோ ஈஸா (அலை) அவர்களின் தோழர்கள் நல்லவர்கள். ஈஸா (அலை) அவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக விளங்கியவர்கள் என்றும் பெருமைப் படுத்துகின்றது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.  (3:52)

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)  (3:53)

ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.  (5:110)

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).  (3:49)

பொதுவாகக் கிருத்துவர்கள் அனைவரும் ஈஸா (அலை) அவர்களை 'இறைவன்' என்று கூறுவதற்கு. "அவர் இறந்தோரை உயிர்பித்தார்; பிறவியிலேயே கண்பார்வை இழந்தவரையும் தொழுநோயாளியையும் இதர நோயாளிகளையும் குணப்படுத்தினார்; மறைவான செய்திகளை எடுத்துரைத்தார்; களிமண்ணில் பறவை பொம்மையைச் செய்து அதில் அவர் ஊதினால் உடனே (உயிருள்ள) பறவையாக அது மாறிவிடும்" என்பனவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர். உண்மையில் இவையனைத்தும் அல்லாஹுவின் ஆணையின் பேரில் நடந்தன. ஈஸ்சவை மக்களுக்கு ஒரு சான்றாக ஆக்குவதற்காக அல்லாஹுதான் இவற்றை அவர் மூலம் நிகழ்த்திக் காட்டினான்.

அல்லாஹ் ஒவ்வொரு நபியையும் அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்ற அற்புதங்களைச் செய்துகாட்டுபவர்களாகவே அனுப்பினான். அந்த வகையில் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களது காலத்தில் சூனியக் கலை பரவலாக இருந்தது.அந்தச் சமூகத்தில் சூனிய்யக்காரர்களுக்கு மரியாதை இருந்தது.

எனவே, பார்வைகளைக் கட்டிப் போடுகிற, சூனிய்யக்காரர்களையே திகைக்கவைக்கிற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கி அல்லாஹ் அனுப்பிருந்தான். அந்த அற்புதங்கள் யாவும் அடக்கியாளும் அல்லாஹுவிடமிருந்து அவருக்குக் கிடைத்தவைதாம் என்பதை மக்கள் உறுதியாக நம்பியபோது, இஸ்லாத்தில் இணைந்தனர். அல்லாஹுவின் நல்லடியார்களில் அவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவ்வாறே மருத்துவர்கள் மற்றும் இயற்பியலாளர்கள் நிறைந்த காலத்தில் ஈஸா (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். மார்க்கத்தை வழங்கிய அல்லாஹுவால் பலப்படுத்தப்பட்டவரைத் தவிர வேறு யாரும் நெருங்கக்கூட முடியாத பேரற்புதங்களை ஈஸா (அலை) அவர்கள் கொண்டுவந்தார்கள். உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்தார்கள். பிறவிலேயே கண்பார்வை இழந்தவரையும் தொளுநோயாளியேயும் குணப்படுத்தினார்கள். சவக் குழியில் மறுமை நாள்வரை கிடக்க வேண்டிய பிரேதத்திற்கு உயிர் கொடுத்து எழுப்பினார்கள். இதற்கான சக்தி ஒரு சாமானிய வைத்தியனுக்கு எங்கிருந்து கிடைக்கும்?

அதைப் போன்றே, முஹம்மது (ஸல்) அவர்கள் செம்மொழியாலர்களும் இலக்கியவாதிகளும் வாழ்ந்த காலத்தில் நபியாக அனுப்பப்பெற்றார்கள்.  கவிஞர்களின் செம்மொழிகள் அப்போது பெயர் பெற்று விளங்கின. ஆகவே, ஓர் அற்புதமான இறைவேதத்தை மக்களிடம் அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்தக் குர்ஆனைப் போன்றதொரு வேதத்தையோ, அல்லது அதிலுள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களையோ, அல்லது அதைப் போன்ற ஓர் அத்தியாயத்தையோ கூட உருவாக்குவதற்காக எல்லா மனிதர்களும் ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் அவர்களால் ஒருபோதும் அது முடியாது. அவர்களில் சிலர் வேருசிலருக்குத் துணை புரிந்தாலும் சரியே! அது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹுவின் உரையாகும்; அது படைபினங்களின் உரைக்கு ஒரு போதும் நிகராகாது என்பதே இதற்குக் காரணமாகும்.

ஆக அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று கூறுவதானால்; செங்கடலை இரண்டாகப் பிளந்த மூஸா (அலை) அவர்கள் (மோசஸ்),  சந்திரனை இரண்டாகப் பிளந்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) ஆகியோரையும் அவ்வாறு கூற வேண்டும், இவர்களெல்லோரும் தாம் இறைத்தூதர்தாம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காக அல்லாஹுவின் பேருதவியால் செய்து காட்டிய அற்புதங்களே இவை. எனவே, இவர்கள் மனிதர்களே தவிர கடவுளர்கள் அல்லர்.

இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) ஆகியோரையும் அவ்வாறு கூற வேண்டும். இவர்களெல்லோரும் தாம் இறைதூதர்தாம் என்பதைப் பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காக அல்லாஹுவின் பேருதவியால் செய்து காட்டிய அற்புதங்களே இவை. எனவே, இவர்கள் மனிதர்களே தவிர, கடவுளர்கள் அல்லர்.

அதைப் போன்றே கிருத்துவர்கள் ஈஸா இறைவனின் குமாரர் என்பதற்கு, அவருக்குத் தந்தை யாருமில்லை அது மட்டுமின்றி, மனித சமுதாயத்தில் யாருமே செய்திராத வகையில் மழலைப் பருவத்தில் அவர் பேசினார் என்பதையெல்லாம் சான்றாகக் கூறுகின்றனர்.

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் 'குன்' (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.  (3:59)

அல்லாஹுவின் ஆற்றலைப் பொறுத்தவரையில், தந்தையில்லாமல் படைக்கப் பெற்ற ஈஸா (அலை) அவர்களின் நிலை, ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் நிலையைப் போன்றதே! ஆதம் (அலை) அவர்களை தாயும் தந்தையும் இல்லாமலேயே அல்லாஹ் படைத்தான்.

இன்னும் சொல்வதானால், ஆதமை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான். பின்பு அவரை நோக்கி 'ஆகுக' என்றான். உடனே அவர் ஆகிவிட்டார். எனவே, ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களைத் தாயும் தந்தையுமின்றி படைத்த இறைவன், தந்தையின்றி ஈஸா (அலை) அவர்களைப் படைப்பதற்குத் தாரளமாக ஆற்றல் பெற்றவன் ஆவான். தந்தையின்றிப் படைக்கப்பெற்ற்வர் என்பதால் ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று வாதிடுவதானால், அதனினும் கூடுதலாக ஆதம் (அலை) அவர்களை அவ்வாறு வாதிக்க வேண்டிவரும். அந்த ஆதம் (அலை) அவர்களையே அல்லாஹுவின் மைந்தர் என்று கூறுதல் தவறு என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியிருக்க, ஈஸா (அலை) அவர்களை இறைவனின் குமாரர் என்று வாதிப்பது வெளிப்படையான தவறல்லவா?

ஆதம் (அலை) அவர்களை ஆண் மற்றும் பெண்ணின் துணையின்றி அல்லாஹ் படைத்தான். அவருடைய துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களைப் பெண்ணின் துணையின்றி ஓர் ஆணிலிருந்து மட்டுமே படைத்தான். ஈஸா (அலை) அவர்களை ஆண்  துணையின்றி ஒரு பெண்ணிலிருந்து படைக்கின்றான். இதன் மூலம் தனது ஆற்றலைத் தான் படைப்புகளுக்கு வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்பதே இறைவனின் நோக்கமாகும்.

இதனாலேயே மற்றொரு வசனத்தில் "அவரை (ஈஸாவை) மக்களுக்கு ஒரு சான்றாக நாம் ஆக்குவதற்காக " (19:21) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் குமாரன் இல்லை என்பதை எளிய முறையில் விளங்க கீழே சொடுக்கவும்.
இயேசு இறைமகனா?

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

இன்ஷா அல்லாஹ் தொடரும்.......................................................................

0 comments: