Saturday, March 6, 2010

மத்ஹபுகள் என்றால் என்ன?

‘இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.’ (அல்குர்ஆன் 06:153)

மத்ஹபுகளும் அவைகளிலுள்ள இஸ்லாத்திற்கு முரணான சட்டங்களும்.

மத்ஹபுகள் பற்றி

இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.

இம் மத்ஹபுகளே அநேக அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற அடிப்படைக் காரணியாக அமையும். இம் மத்ஹபுகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்கு நாம் இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்.

1. குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளின் சட்டங்கள் தெளிவாக மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படல்.


2. மத்ஹபுகளிலுள்ள குர்ஆன், ஸுன்னாவை அவமதிக்கும் சட்டங்கள், புத்திக்குப் பொருந்தாத ஆபாசத்தை அள்ளியிறைக்கும் விளக்கங்கள், மத்ஹபை பின்பற்றுபவர்களே பின்பற்றாத மத்ஹபிலுள்ள சட்டங்கள் போன்றவைகளை மக்கள் முன் சமர்ப்பித்தல்.

இவ்விரண்டு விஷயங்களும் மக்களுக்கு தெளிவாக போதிக்கப்பட்டால் அப்பாவி மக்கள் தங்களைத் திருத்திக் கொண்டு தூய இஸ்லாத்தை விளங்கி தமது மறுமை வாழ்வுக்கு உதவக்கூடிய வணக்க வழிபாடுகள் எது என்பதை இனங்கண்டு கொள்வார்கள்.

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் கூறும் விஷயங்களை தெளிவாக சிந்தித்து செயற்பட இறைவன் துணை புரிவானாக!

‘எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை.’ (அல்குர்ஆன் 36:17)

‘மத்ஹபு’ என்பதன் பொருள்

மத்ஹபு என்ற சொல்லுக்கு வழிமுறை, போக்கு, கருத்து என்று பொருள்படும். மக்கள் அன்றைய காலகட்டங்களில் தங்களிடம் இருந்த இமாம்களிடம் சந்தேகங்களைக் கேட்பர். அந்த சந்தேகம் பற்றி பின்பு அவர்கள் உரையாடும்போது இது ஷாபியி இமாம் மத்ஹபு(ஷாபியின் கருத்து) இது மாலிகி மத்ஹபு(மாலிகின் கருத்து) இப்படிப் பேசிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு பேசும்போது பயன்படுத்திய வார்த்தை நிலைத்து இறுதியில் ‘மத்ஹபு’ என்பது இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.

சொல் ரீதியாக ஆராயும்போது ‘தஹப’ என்ற பதத்திலிருந்து பிறந்த ஒரு சொல்தான் மத்ஹபு என்ற சொல்லாகும். ”தஹப’ என்றால் போனான் என்பது பொருள். ‘மத்ஹபு’ என்றால் போகுமிடம் என்று பொருள்படும். எனவேதான் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘நபியவர்கள் மத்ஹபுக்குப் போக நாடினால் தூரமாகுவார்கள்.’ (ஆதாரம்: அபூதாவுத்-01)

இவ்விடத்தில் ‘மத்ஹபு’ என்ற சொல் ‘கழிவறை’ எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் நான்கு மத்ஹபுகள் மட்டுமே உள்ளன. அவை ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹன்பலி என முஸ்லிகள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணமாகும். இஸ்லாத்தில் பல மத்ஹபுகள் உண்டாயின. அவைகளில் முக்கியமான வைகளாக பின்வருபவற்றை குறிப்பிடலாம்.

1. சைதி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவரின் பெயர் ‘சைத் பின் அலி’ என்பதாகும். இவர் ஹுசைன்(ரழி) அவர்களின் வழித்தோன்றலாவார். நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகினறது. கி.பி.700க்குப் பின் மதீனாவில் பிறந்து 740ல் மரணமடைந்தார். இவர் இமாம் அபூஹனிபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் நாட்டில் இம் மத்ஹபு இன்றும் கூட பின்பற்றப்படுகிறது.


2. அவ்சாயி மத்ஹபு
இம்மத்ஹபின் தலைவரின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் அல் அவ்சாயி என்பதாகும். இவர் கி.பி.708ல் பிறந்து 774ல் மரணமடைந்தார். இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவரும் இமாம் அபூஹனீபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. ழாஹிரி மத்ஹபு
இம் மத்ஹபின் ஸ்தாபகர் பெயர் தாவுத் இப்னு அலி என்பதாகும். இவர் கி.பி.715ல் கூபாவில் பிறந்து 883ல் மரணமடைந்தார். ஸ்பெயின் போன்ற நாடுகளில் இம் மத்ஹபு காணப்படுகிறது. இவர் இமாம் ஹன்பலியின் காலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

4. லைதி மத்ஹபு
இதைத் தோற்றுவித்தவர் லைத் என்பவர் என்று கூறப்படுகின்றது. இவர் எகிப்தில் கி.பி. 716ல் பிறந்து 791ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


5. தவ்ரி மத்ஹபு
இம் மத்ஹபுக்குச் சொந்தக்காரரின் பெயர் சுப்யானுத் தவ்ரி என்பதாகும். இவர் கி.பி. 719ல் கூபாவில் பிறந்து 777ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


6. ஜரீரி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவர் முஹம்மது இப்னு ஜரீர் இப்னு யஸீத், என்பவராவார். கி.பி.839ல் பிறந்து 929ல் மரணமடைந்தார்.

ஆகவே மத்ஹபுகள் என்பது நான்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இன்னும் பல உண்டு என்பதை அறியலாம். ‘மத்ஹபு’ என்பது அந்தந்த இமாம்களின் கருத்தை அடிப்படையாக்க கொண்டு இருந்ததே தவிர அழ்ழாஹ்வாலும் அவனுடைய தூதராலும் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மத்ஹபுகள் மறைந்தமைக் கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் போனமை.
3. இம்மத்ஹபுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கூடுதல் கவனம் செலுத்தாமை.


நான்கு மத்ஹபுகளான ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹம்பலி ஆகியவைகள் இன்றுவரை நிலைத்தமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இந்நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோர் அதிகமாக இருந்தமை.
2. ஆட்சியாளர்கள் இம்மத்ஹபுகளுக்கு ஆதரவாக இருந்தமை.
இதனால்தான் இவைகள் நிலைத்ததேயன்றி இறைவனின் அங்கீகாரத்தால் அல்ல. இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


நன்றி தாருல்அதர்

0 comments: