Thursday, March 25, 2010

குழப்பத்தை தோற்றுவிக்கும் மத்ஹபுச் சட்டங்கள்

‘அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (அல்குர்ஆன் 4:82)

இஸ்லாம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லக் கூடிய ஓர் மார்க்கமாகும். இஸ்லாத்தில் ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், வெள்ளையன். கறுப்பன் என்ற வித்தியாசம் கிடையாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உலகிற்குப் போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை வேற்று மதத்தில் இருப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்கின்றனர்.

இத்தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இன வேறுபாட்டை காட்டும் வகையில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலியென்று மத்ஹபுகளின் பெயரால் இவர்கள் பிரிந்தது மாத்திரமின்றி சட்டங்களிலும் பாகுபாடு காட்டுவது அல்லாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான் என இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூறியிருக்க மத்ஹபுகளின் பெயரால் பிரிந்தவர்கள் ஒரே விடயத்தில் பல்வேறுபட்ட சட்டங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாம் பின்னால் கூறப்போகும் ஒரே விடயத்தில் ஷாபி மத்ஹபுக்காரர்களுக்கு கூடும் என்றும், ஹனபி மத்ஹபுக் காரர்களுக்கு கூடாது என்றும், மாலிகி மத்ஹபுக் காரர்களுக்கு இரண்டும் கூடும் என்றும். சட்டம் அமைந்திருப்பதைக் கானலாம்.

இவ்வாறான சட்டங்கள் மூலமாக அல்லாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கத்தில் மக்கள் பலதரப்பட்ட அடிப்படையில் காணப்படுகின்றனர். இன்னும் சிலர் இக்கருத்துக்களில் எது சரியானது? என்று குழம்பிப் போகின்றனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பற்றிய அறியாமையாகும்.

இனி மத்ஹபுகளில் உள்ள மக்களைக் குழப்பக்கூடிய சட்டங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
இஸ்லாம் வுழுவை முறிக்கக் கூடிய காரியங்கள் எவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அவற்றில் ‘ஒரு பெண்ணைத் தொட்டால் உளூ முறியாது. மாறாக, உடலுறவு கொண்டால்தான் உளூ முறியும்’ என்பதும் ஒன்றாகும்.

ஆனால் மத்ஹபுகள் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பாருங்கள்.

ஷாபி மத்ஹபில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும்.


இது தொடர்பாக நவவி அவர்கள் தமது மஜ்மூஃ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
பார்த்தால் ஆசை ஏற்படக்கூடிய அந்நிய ஆண் அல்லது பெண்ணுடைய உடலுறுப்புக்கள் சந்தித்தால் தொட்டவரின் உளூ முறிந்து விடும். ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும். மறந்து தொட்டாலும் விரும்பித் தொட்டாலும் சரியே! (நூல்: அல் மஜ்மூஃ, பாகம்-2 பக்கம்-26,33)

ஹனபி மத்ஹபில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது. இது தொடர்பாக இப்னு நஜ்ம் அவர்கள் தமது அல் பஹ்ருர் ராயிக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஒரு பெண்ணுடைய உடம்பை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது. (நூல்: அல் பஹ்ருர் ராயிக் பாகம்-1 பக்கம்-47)

இமாம் மாலிக்கிடத்தில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டால் மாத்திரம்தான் உளூ முறியுமேயன்றி ஆசையின்றித் தொட்டால் உளூ முறியாது. இது தொடர்பாக அபுல் அஸ்ஹரி அவர்கள் தமது ‘அத்தமருத் தானி பீ தக்ரீபில் மஆனி’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஆசையோடு தொட்டால் தொடுவதின் மூலம் உளூ செய்வது அவசியமாகும். இன்பத்தை அடைந்தாலும் அடையாவிட்டாலும் சரியே! (நூல் அத்தமருத் தானி பீ தக்ரீபில் மஆனி, பாகம்-1 பக்கம்-30)

இமாம் அஹ்மதிடத்தில் ஒரு கருத்தின் பிரகாரம் ஆசையோடு தொட்டால் மாத்திரம்தான் உளூ முறியுமேயன்றி ஆசையின்றித் தொட்டால் உளூ முறியாது. இது தொடர்பாக மாவுர்தி அவர்கள் தனது ‘அல் இன்ஸாப்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ளூவை முறிக்கக் கூடிய அம்சங்களில் ஒன்று ஒரு பெண்ணை ஆசையோடு தொடுவதாகும். (நூல்: அல் இன்ஸாப், பாகம்-1 பக்கம்-211)

மற்றொரு கருத்தின் பிரகாரம் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது என்பதாகும்.

இந்தக் கருத்துக்களின் பிரகாரம்தான் எமது சகோதர, சகோதரிகள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றால் அவர்களை கூட்டிச் செல்லும் வழிகாட்டி களான மார்க்க அறிஞர்கள் சஊதி அரேபியாவில் வைத்து ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் நம்மவர்களை ஹனபி மத்ஹபுக்கு மாறிவிடுமாறு கூறுவர்.

இதற்கு அறபியில் ‘மஸ்அலதுத் தல்பீக் ஒரு மத்ஹபுக் கருத்தில் இருந்து மற்றொரு மத்ஹபுக் கருத்துக்கு மாறல்’ என்று சொல்லப்படும். இதன் அடிப்படையில் தான் நம்மவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறித்த விடயத்தில் மத்ஹபுகளின் பெயரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளதை அவதானிக்கலாம். இதில் சரியான கருத்து எது என்பதை அல்குர்ஆன், ஸுன்னாவில் தேடிப்பார்த்தால் பொதுவாக பெண்ணைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம். ஆனால், தொடும் போது முன்துவாரத்தால் ஏதாவது வெளிப்பட்டால் உளூ முறிந்துவிடும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.


பெண்களைத் தொட்டால் வுழு முறியாது என்பதற்கான ஆதாரங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிமார் சிலரை முத்தமிட்டு விட்டு உளூ செய்யாமல் தொழுதார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூற்கள்: அபூதாவுத்-179 அஹ்மத்-25766)

‘நான் நபி(ஸல்)அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்திற்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-513)

ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது.

அப்போது அவர்கள் ‘அல்லாஹும்ம அஊது பிரிளாக்க மின் சகதிக்க வபிமுஆஃபாதிக்க மின் உகூபதிக்க வஅஊது பிக்க மின்க்க லா உஹ்ஸி ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நப்ஸிக்க’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் (தண்டனையி) னையை விட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்து கொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்)’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-839)

நபி மொழிகள் தெட்டத்தெளிவாக உளூ முறியாது என்று கூறியிருக்க மத்ஹபுகள் வுழு முறியும் எனக்கூறுகிறது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் தமது விருப்பத்தின் பேரில் ஒன்றைக் கூடும் என்றோ, கூடாது என்றோ சொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கூட அதிகாரம் கிடையாது. நபியவர்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில் தேனை தமக்குத் தாமே தடுத்துக் கொண்ட போது அல்லாஹ் சூறதுத் தஹ்ரீம் என்ற ஓர் அத்தியாயத்தையே இறக்கி நபியவர்களைத் கண்டித்தான். இந்த விபரத்தை ஸஹீஹுல் புஹாரி-4911 இலக்கத்தில் பார்க்கலாம்.

ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும் என்று கூறுபவர்கள் பிரதான ஆதாரமாக எடுத்து வைக்கும் ஆதாரமும் அதற்கான தெளிவான விளக்கமும். இக்கருத்தைக் கொண்டவர்கள் திருமறைக் குர்ஆனில் 5ம் அத்தியாயம் 6ம் வசனத்தில் உளூவை முறிக்கக் கூடிய காரியங்களைக் குறிப்பிடும் போது அல்லது (உடலுறவின் மூலமாக) பெண்களை தீண்டினால் என இறைவன் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்தை இவர்கள் பெண்களைத் தொட்டால் என தவறாக மொழியாக்கம் செய்கின்றனர். சரியான மொழியாக்கம் நாம் மேலே குறிப்பிட்டதாகும். இதை நாம் பின்வரும் அடிப்படையில் கூறுகிறோம். ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெட்டத் தெளிவாக பெண்களைத் தொட்டால் உளூ முறியாது எனக்குறிப்பிடுகின்றது.

அடுத்து மேலே கூறப்பட்ட வசனத்தில் இறைவன் கையாலும் சொற்றொடர்களின் போக்கை கவனிக்கும் போது தெளிவாக பெண்களைத் தொடுவதால்; உளூ முறியாது என்பதைக் காணலாம்.

இறைவன் இவ்வசனத்தில் சிறு தொடக்கில் இருப்பவர் உளூ செய்து துப்பரவாக வேண்டும் என்றும் பெருந் தொடக்கில் இருப்பவர் குளித்து துப்பரவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, சிறு தொடக்கிற்கு உதாரணமாக மலஜலம் கழிக்கச் சென்று வருவதையும் பெருந் தொடக்கிற்கு உதாரணமாக பெண்களோடு உடலுறவு கொள்வதையும் குறிப்பிடுகின்றான்.

ஹதீஸ்களின் துணையுடன் இவ்வாறுதான் இவ்வசனத்தைப் புரிய வேண்டும். அவ்வாறின்றி பெண்களைத் தொட்டால் என மொழியாக்கம் செய்தால் குர்ஆனின் போக்கிற்கு மாற்றமானதாக அமைந்து விடும்.

நன்றி தாருல் அதர்

0 comments: