Saturday, March 6, 2010

இமாம் மாலிக் பின் அனஸ் அவர்களின் வரலாறு(ஹிஜ்ரி 93-170)

மக்கள் மார்க்க விசயங்களுக்காக குறிப்பிட்ட மத்ஹபுகளைப் பின்பற்றி வரக் கூடிய நடைமுறையில், இமாம் மாலிக் அவர்கள், அதன் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர், ஹிஜ்ரி 93 ல் பிறந்தார். அதாவது 8 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் பிறந்தவராவார்.

இவரைப் பற்றி சுவாரஷ்யமாக விசயம் என்னவென்றால், இவர் தனது இளமைக்காலத்தில் மிகவும் அழகாகப் பாடக் கூடிய திறமையைப் பெற்றிருந்ததோ, அதனைத் தொழிலாகவும் கொண்டிருந்தார். இசையில் மிகவும் திறமை பெற்றிருந்ததோடு, அதற்கு அவரது குரலினிமையும் கை கொடுத்தது.

ஆனால் அவரது தாயாரின் அறிவுரைப்படி, இஸ்லாமிய கல்வி கற்பதற்காக இஸ்லாத்தின் முதல் பள்ளிக் கூடமும், பல்கலைக்கழகமுமான இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதீனத்து நபவியில் சென்று குர்ஆன் மற்றும் நபிமொழிகளையும் மனனமிட்டுக் கொள்வதோடு, மார்க்கக் கல்வியையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

அவர் இஸ்லாத்தினைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த அந்த ஆரம்பகால நாட்களில் எழுது பொருட்களும், எழுதப்பட்ட நூல்களும் அரிதான ஒன்று. எனவே, மாணவர்கள் தங்களது ஞாபகத்திறன் மூலம் மட்டுமே கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இமாம் மாலிக் அவர்கள் மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்தார்கள்.

அவரது ஆசிரியர் நபிமொழிகளைப் பற்றி நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, ஒவ்வொரு நபிமொழிக்கும் தான் வைத்திருக்கின்ற நூலில் ஒரு முடிச்சினைப் போட்டு வைத்துக் கொண்டு, பள்ளிக் கூடம் முடிந்ததும், எத்தனை நபிமொழிகள் நடத்தப்பட்டதோ, அத்தனை நபிமொழிகளுக்கான முடிச்சைக் கணக்கு வைத்து, அதனை மீட்டி சரி பார்த்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார். ஒருமுறை அவரது ஆசிரியர் 30 நபிமொழிகளை நடத்தினார், அதனைப் பற்றிய கலந்துரையாடலும், ஆய்வும் நடைபெற்று முடிந்தது. அதனை மீட்டிப் பார்க்க எண்ணிய இமாம் மாலிக் அவர்கள் 29 நபிமொழிகளை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து விட்டார். ஒரே ஒரு நபிமொழியை மட்டும் அவரால் ஞாபகத்திற்குக் கொண்டு வர இயலவில்லை. உடனே தாமதிக்காது தனது ஆசிரியரிடம் சென்று, விடுபட்ட அந்த நபிமொழியைக் கேட்டறிந்து, அதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டார்.

இமாம் மாலிக் அவர்கள் பள்ளியில் கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளாது, இஸ்லாமிய மார்க்க விசயங்களை அறிந்த அவரது உடன் பயிலும் நண்பர்கள் மூலமும் மற்றும் 90 மார்க்க அறிஞர்கள் மூலம் கற்றுக் கொண்டதோடு, அவர்களது வாழ்க்கை வரலாறு, அவர்களுடன் இறைநம்பிக்கை பற்றி விசயங்களில் நடத்திய கலந்துரையாடல்கள், இன்னும் ஹஜ் செய்வதற்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வரக் கூடிய அறிஞர் பெருமக்களிடம் சென்று கல்வி கற்றல் போன்றவற்றின் மூலம் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்தார்கள்.

இதன் காரணமாக மிக இளம் வயதிலேயே மதீனத்து நபவி பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தக் கூடிய அளவுக்கு உயர்ந்தார், அப்பொழுது அவருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். ஆனால் அவர் பாடங்களை நடத்தக் கூடிய அளவுக்கு திறமை பெற்றவர் தான் என்பதை 70 க்கும் குறையாத ஆசிரியர்கள் கணித்து சாட்சியம் அளித்ததோடு, இன்னும் சில ஆசிரியர்களே அவரிடம் வந்து பாடம் கற்கும் அளவுக்கு அவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். அதுவரை அவர் பாடம் நடத்துகின்ற ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

மிகவும் வைதீக - மார்க்க விசயங்களில் மிகத் தீவிரப்பிடிப்புள்ள இமாம் மாலிக் அவர்கள், மதீனத்து நபவியின் ஆசிரியர் என்ற முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்கள். அவர் எப்பொழுதும் நபிமொழிகளைப் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தாலும், அதற்கு முன் குளித்து, தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு பாடங்களை நடத்த ஆரம்பிப்பதோடு, தன்னுடைய குரலைத் தாண்டி யாரையும் சப்தத்தோடு பேச அனுமதிக்க மாட்டார். இன்னும் மதீனாவில் அவர் வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்ய மாட்டார், ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இந்த நகரில், வாகனத்தில் அமர்ந்து செல்லக் கூடியவனாக என்னை ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று கூறுவாராம்.

இமாம் மாலிக் அவர்கள் உமைய்யாக்களின் ஆட்சி போய், அப்பாஸியர்களின் ஆட்சி வந்த காட்சியைப் பார்த்தவறும், எண்ணற்ற கலீபாக்களைக் கண்டவரும் ஆவார். அவரது கல்வி, புலமை மற்றும் கௌரவம் காரணமாக பல கலீஃபாக்கள் இவரிடம் வந்து மார்க்க விசயங்களில் இவரது அறிவுரையைக் கேட்டுச் சென்றிருக்கின்றார்.

கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இமாம் மாலிக் அவர்களின் அல் முவத்தா நபிமொழித் தொகுப்பைப் பற்றி அறிந்து, அதனைத் தன்னுடைய பார்வைக்குக் கொண்டு வருமாறும், அதனைப் பார்க்க விரும்புவதாகவும் ஒரு தூதரை இமாம் மாலிக் அவர்களிடம் அனுப்பி வைத்தார்.

வந்த தூதரிடம்,

என்னுடைய வாழ்த்துக்களை கலீஃபாவுக்குச் சொல்லுங்கள்.

இன்னும், அறிவை அவர் தான் வந்து சந்திக்க வேண்டும்.

கல்வியை மக்கள் தான் தேட வேண்டும்.

மக்களைக் கல்வி தேடாது என்று அந்தத் தூதரிடம் கலீஃபாவுக்குப் பதில் கூறி அனுப்பினார்கள்.

நான் அழைத்தும் வரவில்லையே, என்று இமாம் மாலிக் அவர்களை கலீஃபா குற்றப்படுத்தினார். இதனை அறிந்த இமாம் மாலிக் அவர்கள்,

நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே..!

அல்லாஹ் தன்னுடைய பொறுப்பிற்கான பிரதிநிதி உங்களை அந்த ஆசனத்தில் அமர வைத்திருக்கின்றான். நீங்கள் உங்களது அந்த இடத்தை கல்வி மற்றும் அறிவின் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலம், உங்களது இடத்தைத் தரம் தாழ்த்தி விடாதீர்கள். இதன் மூலம் அல்லாஹ் உங்களது மதிப்பைத் தாழ்த்த மாட்டான். நான் உங்களுக்கு கீழ்ப்படியவில்லை என்பதல்ல பொருள். ஆனால் நம்பிக்கையாளர்களின் தலைவராக இருக்கக் கூடிய நீங்கள், கல்வியைக் கற்றுக் கொள்தவற்கும், கல்வியாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலம் உங்களது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று தான் கூற விரும்புகின்றேன். இமாம் அவர்களது பதிலால் சமாதானமடைந்த கலீஃபா அவர்கள் நடந்து வந்து இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டதோடு, அவரது நூல்களையும் வாசித்து விட்டுச் சென்றார்.

இஸ்லாத்தில் நல்ல புலமை உள்ளவர்களின் அடுத்த குணநலன்கள் எவ்வாறு இருக்குமெனில், இமாம் அவர்கள் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் பொழுது, கல்வியைக் கற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் அதனை செயல்படுத்துவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதோடு, பணிவு மற்றும் தனக்கு எது பற்றிய அறிவில்லையோ அதனைப் பற்றிய கருத்துக் கூறும் பொழுது, அதனைப் பற்றி எனக்குத் தெரியாது என்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்று வலியுறுத்தக் கூடியவராக இருந்தார். இன்னும் உண்மையான மார்க்க அறிஞருக்கு இருக்க வேண்டிய தைரியமான பண்பு என்னவென்றால், எது பற்றித் தனக்குத் தெரியாதோ, அதனைப் பற்றி பிறர் வினவும் பொழுது, '' இது பற்றி எனக்குத் தெரியாது'' என்று தெளிவாக் கூறக் கூடிய தைரியம் வேண்டும் என்று தனது மாணவர்களிடம் வலியுறுத்தக் கூடியவராக இருந்தார்.

ஒருமுறை ஒரு மனிதர் மாலிக் பின் அனஸ் அவர்களிடம் வந்து, உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்பதற்காக ஆறு மாதங்களாகப் பயணம் செய்து வந்திருக்கின்றேன். அது பற்றி எனக்கு விளக்க வேண்டும் என்று கூறினார். மாலிக் பின் அனஸ் அவர்கள் அவர் கேட்ட கேள்விக்கான சரியான விடையைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இறுதியாக கேள்வி கேட்ட அந்த மனிதரிடம், நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை. அது பற்றி எனக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். கேள்வி கேட்ட அந்த மனிதர் கூறினார், மாலிக் அவர்களே..! நான் இதற்கான பதிலைப் பெறுதவற்காகவே ஆறு மாதம் பயணம் செய்து வந்திருக்கின்றேன், நான் திரும்பிச் சென்று என்னுடைய மக்களுக்கு இது குறித்து என்ன விளக்கத்தைக் கூறுவேன் என்றார். மாலிக் பின் அனஸ் அவர்களோ..! நண்பரே..! மாலிக் பின் அனஸ் அவர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்று கூறுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.

மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகளை வழங்கும் பொறுப்பேற்றிருந்ததோடு, மார்க்க விசயங்களில் தீர்ப்பு வழங்கும் தகுதியைப் பெற்றிருந்தார். இன்னும் மார்க்க விசயங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான நபிமொழிகளைத் திரட்டி வைத்திருந்ததோடு, அதன் அறிவிப்பாளர் வரிசையையும் அறிந்து வைத்திருந்தார். யாராவது அவரிடம் மார்க்க விசயங்கள் பற்றி கேள்வி கேட்பாராகில், உடனே பதில் சொல்லாமல் அவரைச் சற்று காத்திருக்கச் சொல்லி, பின்பு தான் அவர் கேட்ட கேள்விக்கான பதிலை வழங்குவார்.

மாலிக் பின் அனஸ் அவர்கள், அவர்களது பிரபலமான நபிமொழித் திரட்டான அல் முவத்தா வினால் மிகவும் நன்கறியப்பட்டவராவார். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமிய கல்வி புகட்டுதலில் இரண்டாவது அந்தஸ்தைப் பெற்ற தொகுப்பு என்ற நற்பெயர் பெற்றது. சில வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, இந்தத் தொகுப்பை தொகுத்து முடிக்க 40 ஆண்டுகள் ஆனதாகக் கூறுகின்றார்கள். இன்றைக்கும் இந்த நூல் கோடிக்கணக்கான மக்களுக்கு மார்க்கத்தின் வழிகாட்டியாக விளங்கி வருகின்றது.

0 comments: