Saturday, January 16, 2010

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட தர்கா வழிபாடு


(அல்லாஹ்வுடைய நேசரான) ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க, அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?

ஹதீஸ்கள்:-
நிச்சயமாக உம்மு ஸலமா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள், அபீஸீனியா நாட்டில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவப் படங்களையும் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் அப்போதவர்கள் அது, அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால், அ(ந்த நல்ல)வருடைய சமாதியின் மீது மஸ்ஜிதைக் கட்டி, அந்தப்படங்களை அதில் உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ


இவர்கள், சமாதிகளின் குழப்பம் மற்றும் உருவப்படங்களின் குழப்பம் ஆக இரண்டு குழப்பங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டார்கள் (என்ற இப்னு தைமிய்யா அவர்களின் கூற்றை, இவ்விரண்டால் ஏற்பட்ட தீமைகளின் கொடூரத்தை உணர்த்த ஆசிpரியர் எடுத்துக் கூறியுள்ளார்)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது, தன் முகத்தின் மீது தனக்குரிய ஓர் ஆடையை போடுபவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் மூச்சுத் திணறும் போது, அதை (முகத்தை விட்டும்) உயர்த்தி, அவ்வாறான நிலையிலேயே அவர்கள் இருக்க, 'யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டார்கள்' என அவர்கள் செய்து கொண்ட ஒன்றை (மற்றவர்களுக்கும்) எச்சரிப்பவர்களாக - கூறுவார்கள். இ(வ்வகை எச்சரிக்கையான)து இல்லாதிருந்தால் அவர்களின் சமாதி (வீட்டுக்கு வெளியில் பகிரங்கமாக) ஆக்கப்பட்டிருக்கும் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது. அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ, முஸ்லிம்.

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் - (நபி) இப்றாஹீமை தன் உற்ற தோழராக அவன் எடுத்துக் கொண்டது போன்று - என்னையும் அவன் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டான். நான் என் உம்மத்தவரிலிருந்து ஒரு உற்ற தோழரை எடுத்துக் கொள்பவனாக இருந்தால், அபூபக்கரையே உற்ற தோழராக எடுத்திருப்பேன் அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். ஆகவே, அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் சமாதிகளை வணக்கத்-தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன் என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பாளர்: ஜூன்துப் பின் அப்துல்லாஹ் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் கடைசி நேரத்தில் அதை விட்டும் தடுத்துள்ளார்கள்.

பின்னர், நிச்சயமாக அவர்கள் முன் சென்ற ஹதீஸின் தொடரிலே அதைச் செய்பவரை சபித்துள்ளார்கள். அவ்விடத்தில் தொழுவதும் - பள்ளியாக அது கட்டப்படாவிட்டாலும் அ(வ்வாறு சபிக்கப்பட்ட)தில் உள்ளதாகும். இதுவே ஆயிஷா அவர்களின் (நபிகளாரின் கப்ரான) அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது என்ற சொல்லுக்கு விளக்கமாகும். எனவே, நபித்தோழர்கள் நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமாதியைச் சுற்றி மஸ்ஜிதைக் கட்டவில்லை. தொழுகையை நிறைவேற்ற நாடப்படுகின்ற ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாக எடுக்கப்பட்டதாகும். மாறாக, எனக்கு பூமியை மஸ்ஜிதாகவும், (அதன் மண்ணைக் கொண்டு தயம்மும் செய்வதற்கு) சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று தொழப்படக் கூடிய ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாகக் கணிக்கப்படும்.

எவர்களை மறுமை நாள் - அவர்கள் உயிரோடு இருக்கும் நிலையிலேயே வந்தடையுமோ அவர்களும், சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டார்களே அத்தகையோருமே நிச்சயமாக மக்களில் மிகக் கெட்டவர்கள் என ஹதீஸில் வந்துள்ளது. அறிப்பாளர்: இப்னு மஸ்ஊது - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்னது அஹ்மது

படிப்பினைகள்:-
1. நல்லவர்களின் சமாதிகளில் மஸ்ஜிதுகளைக் கட்டுவதைப் பற்றி நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றை அறிந்து கொள்வது.

2. சிலைகளை தவிர்த்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவதைத் தடுத்து நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்வது. அதாவது நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இதை முதலில் விவரித்துக் கூறி, பின்னர் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அதை தடுத்துக் கூறியதுடன் நிறுத்தி விடாது, தம் உயிர் பிரியும் கடைசி கட்டத்திலும் அதைத் தடுத்துக் கூறி எச்சரித்துள்ளார்கள்.

4. நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு உருவாவதற்கு முன்னால் அதை மஸ்ஜிதாக ஆக்குவதை விட்டும் தடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது.

5. நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதாக ஆக்குவது யூத, கிறிஸ்தவர்களின் வழியாகும்.

6. இவ்வாறு செய்ததினால் அவர்களை நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. இவ்வாறு நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துக் கூறியதின் நோக்கம் நம்மை எச்சரிக்கை செய்வதாகும்.

8. ஏன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை வெளியில் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதின் காரணம் மேல் சென்ற ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டவர்களும், கியாமத் நாள் வரும் பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இருசாரார்களை இணைத்து ஒரே ஹதீஸில் கூறியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வது.

10. ராஃபிளிய்யா, ஜஹ்மிய்யா என்ற இருசாரார்களுக்கு மேலேயுள்ள இரண்டாவது ஹதீஸில் மறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சாரார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ராஃபிளிய்யா என்ற சாரார்களினால்தான் (முஸ்லிம்களின் மத்தியில்) ஷிர்க்கும், கப்ரு வணக்கமும் உண்டானது. அவர்கள்தான் முதலில் கப்ருகளின் மீது மஸ்ஜிதுகளைக் கட்டினார்கள்.

11. மரண வேளையில் ஏற்படும் வேதனை கொண்டு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.

12. அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நபித்தோழர்களில் சிறந்தவர் என்று மேலேயுள்ள ஹதீஸில் தெளிவாக வந்துள்ளது. மேலும், அவர்கள்தான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முதல் கலீஃபா ஆவார்கள் என சமிக்கினையாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில படிப்பினைகள்:-
சமாதிகளின் மீது கட்டிடங்களை எழுப்பியதால் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க்கான பல செயல்கள் நிகழ்கின்றன அவற்றை எல்லாம் விரிவாக அல்லாஹ்தான் நன்கறிவான். என்றாலும், இஸ்லாமிய மார்க்க மூதறிஞர்களில் ஒருவரான இப்னுல் கைய்யிம் - ரஹிமஹூல்லாஹூ அவர்கள் அதில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்கள். அதை இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

1. சமாதியில் தொழுவதை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்க அதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டனர்.

2. அங்கு சென்று தங்களுக்காக துஆச் செய்கின்றனர். மேலும், இந்த அவ்லியாவின் கபுரடியில் துஆச் செய்தால் உடனே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று கூறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டிய பித்அத்தான செயலாகும்.

3. கஷ்டங்களை நீக்கவும், நல்லதைக் கொடுக்கவும் இந்த கப்ரில் அடங்கி இருக்கும் அவ்லியாவுக்கு தனித்தன்மை உண்டு என்று நம்புகின்றனர். மேலும், ஊரில் உள்ள இந்த அவ்லியாவின் சமாதியினால் அந்த ஊர்வாசிகளின் பலாய் முசீபத்துகள் தவிர்க்கப்படுகின்றன என்றும் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக இவையெல்லாமே இஸ்லாத்திற்கு முரணான செயல்கள் என்பதில் சந்தேகமேயில்லை காரணம், அப்படியே அவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின் அதற்கு தகுதியுடைய கப்ரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருதான். ஆனால், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த சொற்ப காலத்திலேயே மதீனா வாசிகளின் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் பலாய் முசீபத்துகள் பஞ்சங்கள், கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு இருப்பதினால் அவை எல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமே! ஏன் தவிர்க்கப்படவில்லை? எப்பொழுது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு இருக்குமிடத்தில் அவை தவிர்க்கப்படவில்லையோ அப்பொழுதே அந்த மக்கள் சொல்வது பொய் எனத் தெளிவாகிறது.

4. கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுகின்றனர். இவ்வாறு ஒன்று கூடுவதால் பல தகாத செயல்களும் தொழுகையை விடுவதும் ஏற்படுகின்றன. இந்தப் பாவங்களை கப்ரு உடையவர்கள் சுமந்து கொள்வார்கள் என நினைக்கின்றனர்.

5. விலையுயர்ந்த பட்டுப்புடவையால் கப்ரை போர்த்தி கண்ணியப்படுத்துகின்றனர்.

6. பொருட்களையும், செல்வங்களையும் அதற்கென்று ஒதுக்கி விடுகின்றனர்.

7. ஜியாரத் செய்கின்றவர்கள் அந்த கப்ருக்கு ஸஜ்தா செய்கின்றனர். இது குஃப்ரு என்பதில் சந்தேகம் இல்லை.

8. அதற்கென்று பொருட்களை ஹதியாவாக கொடுக்கின்றனர். இந்த ஹதியாக்களை பெறக் கூடிய தர்கா லெப்பைமார்கள்தான் இந்த ஷிர்க்கான செயல்களுக்கு முதல் காரணகர்த்தாக்கள். ஏனெனில், இந்த கப்ரில் அடங்கி இருப்பவரை அழைத்தால் பதில் கூறுவார். உதவி கேட்டால் உதவி செய்வார் என்றெல்லாம் அறியாத மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் தங்களுக்கு ஹதியாக்களும், நேர்ச்சைகளும் அதிகமாக வர வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

9. கோவில்களுக்கு பூசாரிகளை நியமிப்பதைப் போல சமாதிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் லெப்பைகளை நியமிக்கின்றனர்.

10. அதில் அடங்கி இருப்பவர் சமாதி வணக்கஸ்தர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட மிக உயர்ந்தவராக திகழ்கின்றார். (உதாரணமாக, திடீரென ஒரு ஆபத்தான காரியம் நடந்துவிட்டால், யாஅல்லாஹ்! என அழைப்பதற்கு பதிலாக யா முஹ்யத்தீன்! யா ஹாஜா! என்றெல்லாம் அழைக்கின்றனர்.)

11. கப்ரை ஜியாரத் செய்யுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறு உலகத்தை நினைவூட்டும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல மறு உலகத்தை நினைவு கூறவேண்டும். அதில் அடங்கியிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் நாம் துஆச் செய்ய வேண்டும். மன்னிப்புக்கோர வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜியாரத்தை இஸ்லாத்தில் அமல்படுத்தினார்கள். ஆனால், கப்ரு வணங்கிகளோ அதை நேர்மாற்றமாக புரட்டி விட்டார்கள். அதாவது அவர்கள் உலக வாழ்க்கையை மனதில் வைத்துக் கொண்டு அங்கு சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்ய வேண்டுகின்றனர்.

மேலும், இதுபோல் மார்க்கத்துக்கு முரணான எத்தனையோ ஷிர்க்கான செயல்கள் தர்ஹாக்களில் நடைபெறுகின்றன. நாம் அவற்றை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொள்வதுடன் பிறரைத் தடுக்கவும் வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நல்லோர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது அவர்களை அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகின்றது

நூலாசிரியர் இத்தலைப்பின் மூலம் நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்:-
1. நல்லவர்களின் கப்ருகளில் வரம்பு மீறுவது குறித்து எச்சரிக்கையாக இருப்பது.

2. அவ்வாறு வரம்பு மீறுவது அவர்களை வணங்கும் அளவுக்கு கொண்டு செல்கின்றது.

3. அவ்வாறு அக்கப்ருகள் வணங்கப் பட்டால் அவற்றுக்கு சிலைகள் என்றே கூறப்படும்.

4. கப்ருகள் மீது கட்டிடங்கள் கட்டுவதற்கும், அவற்றை மஸ்ஜிதுகளாக மாற்றுவதற்கும் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்:-
யாஅல்லாஹ்! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்ரகமாக ஆக்கி விடாதே! தங்கள் நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்களே அந்த சமூகத்தார்மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகயிருக்கின்றது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இமாம் மாலிக் நூல்: அல்முஅத்தா

நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா? என்ற (53:19) வசனத்திற்கு முஜாஹித் அவர்கள் கூறிய விளக்கத்தை இப்னு ஜரீர் அவர்கள் கூறுகிறார்கள் 'லாத்' என்பவர் (முந்தைய காலத்தில் வாழ்ந்த நல்லோர்களில் ஒருவர் அவரின் பெயர் சர்மத் பின் கன்ம் என்பதாகும் அவர்) ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார். அவர் மரணித்து விடவே அவரின் கப்ரில் மக்கள் தங்கியிருக்கலாயினர். இப்படியாக காலப் போக்கில் அவரையே வணங்கலாயினர். இவ்வாறே இப்னு அப்பாஸ் அவர்களும், அவர் ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார் என கூறியதாக அபூல் ஜல்ஸா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது மஸ்ஜிதுகளை மற்றும் (எரிப்பதற்கு) விளக்குகளை எடுத்துக் கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா நூல்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தினர் தம் கப்ரை வணக்கத்தலமாக மாற்றிவிடுவார்களோ என பயந்து அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள்.

2. கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவோரின் மீது அல்லாஹ் கடும் கோபமுடையவனாக இருக்கிறான்.

3. லாத் எனும் சிலை வணங்கப்படும் பெரிய சிலையாக எப்படி ஆனது என்பதை அறிதல்.

4. அது ஆரம்பத்தில் நல்லதொரு மனிதனின் கப்ராகத்தான் இருந்தது.

5. லாத் என்பது அக்கப்ரில் அடங்கியிருக்கும் நல்லவரின் தொழில் பெயராகும்.

6. கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. அதில் விளக்கேற்றுபவர்களையும் சபித்துள்ளார்கள்.
அவ்லியாக்கள், நல்லோர்கள் விஷயத்தில் வரம்பு மீறி நடப்பதுதான் உலகில் ஷிர்க் உண்டாவதற்கான மூல காரணமாகும். அவ்லியாக்களை நேசிக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதுடன் அவர்களுக்குள்ள அந்தஸ்துகளில் அவர்களை வைக்க வேண்டும் அதில் மிகைப்பட நடந்து கொள்ளலாகாது எனவும் கட்டளையிட்டுள்ளான்.

அவ்லியாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கும், நேசிப்பதற்கும் உரிய ஒரே வழி அவர்கள் காட்டிச் சென்ற நற்செயல்களைப் பின்பற்றி நடப்பதும், அந்த வழியில் மக்களை அழைப்பதுமாகும். அவர்கள் சொல்லாத மற்றும் செய்யாத மார்க்கத்திற்கு முரணான காரியங்களை அவர்களின் பெயரில் செய்வது அவர்களை பிரியம் வைப்பதாக ஆகாது. மாறாக, அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஆகவே நமக்கு மத்தியில் அவ்லியாக்களின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் அவர்கள் நமக்குக் கற்றுத் தராத செயல்களாகும். அதைத் தவிர்ப்பது மிகவும் அவசரமும் அவசியமுமானதாகும்.

முஸ்தஃபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ஹீதுடைய புறத்தைப் பாதுகாத்ததிலும், ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் ஒவ்வொரு வழியையும் அவர்கள் அடைத்திருப்பதிலும் வந்துள்ள ஆதாரங்கள்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-
(விசுவாசிகளே!) உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார் (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு வருத்தமாக இருக்கும் உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர் மிகக் கிருபையுடையவர்.

(நபியே! இதற்குப்) பின்னரும், அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக்கொண்டால், (அவர்களிடம்) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை. அவன் மீது (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன். அவனே மகத்தான அர்ஷின் அதிபதியாவான்' (9:128,129)

ஹதீஸ்கள்:-
'நீங்கள் உங்கள் இல்லங்களை கப்ருகளாக ஆக்காதீர்கள் என்னுடைய கப்ரை
அலீ பின் ஹூசைன் அவர்கள், ஒரு மனிதரை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருக்கு பக்கத்திலிருந்த பொந்தின் பக்கம் வந்து அதில் நுழைந்து துஆச் செய்பவராகக் கண்டார்கள் (அதுமாதிரி செய்வதை விட்டும்) அப்போது அவரைத் தடுத்தார்கள் மேலும், நான் உங்களுக்கு என்னுடைய தந்தை, என்னுடைய பாட்டனார் வழியாக நான் செவியேற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை அறிவிக்கட்டுமா? எனக் கூறினார்கள். 'என்னுடைய கப்ரை உங்களின் இல்லங்களை கப்ருகளாகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள் நிச்சயமாக (நீங்கள் என் மீது கூறக்கூடிய) என்னை வந்தடையும்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முக்தாரா

படிப்பினைகள்:-
1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தவர்களை ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் எல்லா வழிகளை விட்டும் தூரமாக்கி உள்ளார்கள்.

2. நாம் சிறந்த உம்மத்தவர்களாக ஆக வேண்டுமென்பதில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாகவும், நம்மீது இரக்க குணமுடையவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

3. ஜியாரத்து செய்வது ஒரு நல்ல செயலாக இருப்பதுடன் குறிப்பிட்ட முறையில் தங்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் நம்மை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.

4. அதிகமாக ஜியாரத் செய்வதையும் தடுத்துள்ளார்கள்.

5. சுன்னத்தான தொழுகைகளை ஆண்கள் தங்களது இல்லத்திலேயே நிறைவேற்றும்படி நம்மைத் தூண்டி உள்ளார்கள். (அதாவது சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறை வேற்றும்படி கூறியுள்ளார்கள்.)

6. கபுரடியில் தொழுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும்.

7. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஒருவர் எங்கிருந்து சலவாத்துஈ ஸலாம் கூறினாலும் அது அவர்களை வந்தடையும். மாறாக, பக்கத்திலிருந்து தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.

8. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலமுல் பர்ஜகில் இருந்தவாறே அவர்கள் மீது கூறப்படும் சலவாத்துகள் மற்றும் ஸலாம்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

ஷேக் முஹம்மத் பின் அப்துல் வஹாப் அவர்களின்
''கிதாப் அத்தவ்ஹீத்'' புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது

நன்றி tamilislam.com

0 comments: