Saturday, January 16, 2010

இஸ்லாம்

இஸ்லாம் என்பது ஓர் அரபுச் சொல். அதன் கருத்து என்ன என அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம்.

இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றில் தனிப்பட்ட ஒருவரின் பெயரிலோ அல்லது ஒரு சமூகத்தின் பெயரிலோ இயங்கி வருவதை நாம் காண முடிகின்றது. கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயரிலும், பௌத்த மதம் மகான் புத்தர் பெயரிலும், கொன்பியூஸியஸ் மதம் கொன்பியூஸியஸ் பெயரிலும், மார்க்சியவாதம் காரல்மார்க்ஸ் பெயரிலும் இயங்கி வருகின்றன, யூத மதம் யூதியா என்ற யூத கோத்திரத்தில் தோன்றியதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அதேபோன்று இந்து மதம் இந்தியாவில் இந்து சமூகத்தில் தோற்றம் பெற்றதால் அதற்கு அப்பெயர் வந்தது.

எனினும், இஸ்லாம் தனிப்பட்ட ஒருவரின் பெயரிலோ அல்லது ஏதாவதொரு நாடு, சமூகம் என்ற பெயரிலோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாம் இந்த பிரபஞ்சத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வினால் மனிதனுக்குத் தரப்பட்ட சத்தியமார்க்கமாகும். அதன் அடிப்படை நோக்கம் முழு மனித சமுதாயமும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதாகும்.

'இஸ்லாம்' என்ற அரபுச் சொல்லுக்கு அடிபணிதல், கீழ்ப்படிதல், இணங்கி நடத்தல் போன்ற கருத்துக்கள் உண்டு. இக்கருத்துக்களுக்கமைய யாரேனும் ஒருவர் அல்லாஹ்க்கு அடிபணிந்து, அவனுக்கு மட்டும் வணங்கி, வழிபட்டு, அவன் காட்டித்தந்த வழிமுறைப்படி வாழ்ந்தால் அவர் ஒரு முஸ்லிமேயாவார். இஸ்லாம் என்ற சொல்லில் சமாதானம் என்ற கருத்தும் உண்டு. எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்கின்றாரோ, அவர் இயற்க்கையாகவே அமைதியை, சமாதானத்தை அடைவார் என்பது இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

இஸ்லாம், ஏழாம் நூற்றாண்டில், அரபு நாட்டில் வாழ்ந்த முஹம்மத்(ஸல்) அவர்களால் கொண்டுவரப்பட்ட மார்க்கம் அன்று. அது அவர்கள் மூலம் இறுதியாகத் தரப்பட்டது உண்மையே. இஸ்லாம் முதன் முதல் அருளப்பட்டது உலகின் முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம்(அலை) அவர்களுக்கேயாகும். ஆவர்களின் இருந்து ஆரம்பமான மனித வர்க்கத்தில் தோன்றிய எல்லாம் இறை தூதர்களினதும் மார்க்கம் இஸ்லாமேயாகும்.

அல்லாஹ்வால் அருளப்பட்ட இஸ்லாத்திற்கு 'இஸ்லாம்' என்று பெயரிடப்பட்டது மனிதனால் அல்ல. அல்லாஹ்வால் வைக்கப்பட்ட சிறப்புப் பெயராகும். அதுபற்றி அல்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. (சூரத்துல் மாயிதா 5:3)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது.(ஆல இம்ரான 3:85)

இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. (ஆல இம்ரான 3:67)

மூஸா(மோஸஸ்) நபியவர்களின் வழிநடந்தவர்கள் அல்லது அவர்களது வழித்தோன்றல்களை விளித்து, 'உங்கள் மதம் யூத மதமே' என்று அல்லாஹ் பைபிளில் எங்கும் காணப்படவில்லை. அதேபோன்று ஈஸா(இயோசு கிறிஸ்து) நபியவர்களது வழியில் சென்றவர்களின் மார்க்கம் 'கிறிஸ்தவ மார்க்கம்' எனவும் கூறப்படவில்லை.

உலகில் தோன்றிய ஏனைய இறைத் தூதர்களைப் போன்று இயேசு நாதரும் தமது சீடர்களுக்குப் போதித்தது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அடிபணிந்து நடக்கும்படியே. மேலும், மனிதன் தனது மனதால் உருவாக்கிக் கொண்ட தவறான தெய்வ நம்பிக்கைகளிலிருந்து தூர விலகி நிற்கும்படியும் அவர்கள் போதனை புரிந்தார்கள்.

பைபிள்ன் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 'சுவனத்தில் போன்று இங்கும் உன் கட்டளைகளுக்கேற்ப செயற்படுவோமாக' என்று பிராத்தனை செய்யும்படி அவர் தனது சீடர்களுக்கு அறிவு புகட்டினார்.