Saturday, January 16, 2010

தவ்ஹீது ருபூபிய்யா உலூஹிய்யயா அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் என்ன?

தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனாகிய அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது)
தவ்ஹீது ருபூபிய்யா என்பது: -
  • அனைத்துப் பொருட்களையும் அவைகள் ஒன்றுமே இல்லாமலிருந்தபோது உருவாக்கியவன் அல்லாஹ்வே
  • அவனே அனைத்துப் படைப்புகளுக்கும் அவைகளிடமிருந்து எந்தவித தேவைகளுமில்லாமல் உணவளித்து பாதுகாத்து வருபவன்
  • அவனே இந்தப் பேரண்டத்திற்கும் மற்றும் அதிலுள்ள அனைவருக்கும் ஒரே இறைவன்
  • அவனுடைய ஆட்சியதிகாரத்தில் யாருக்கும் எவ்வித பங்குமில்லை
  • அனைத்துப் பொருட்களுமே அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டே இயங்குகிறது
  • அவன் அனுமதியில்லாமல் எதுவும் நடக்காது.
என்பன போன்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகும். அரபியில் படைத்துப் பரிபாலிக்கும் தன்மைக்கு “ருபூபிய்யா” எனப்படும். இது “ரப்” என்ற மூலச் சொல்லில் இருந்து உருவானது.
தவ்ஹீது ருபூபிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: -
“அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்” (அல்குர்ஆன் 39:62)
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்” (அல்குர்ஆன் 37:96)
“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன் 8:17)
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)
2. தவ்ஹீதுல் உலூஹிய்யயா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கே செய்து அவனையே வணங்க வேண்டும் என்றும் நம்பிக்கை கொள்வதற்கு “தவ்ஹீதுல் உலுஹிய்யா” என்று பெயர்.
அல்லாஹ் மடடுமே இப்பேரண்டத்தை படைத்து, பரிபாலித்து உணவளித்துக் கொண்டிப்பவன் ஆகையால் அவன் மட்டுமே வணக்கத்திற்கு முழு தகுதியுடையவன் ஆவான். வணக்கம் என்பது அல்லாஹ்தஆலாவிற்கே முழு உரிமையுள்ள ஒன்றாகும். எனவே அவனுடைய படைப்பினங்களான நாம் அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளையும், அதாவது தொழுகை, நோன்பு வைத்தல், ஜக்காத் கொடுத்தல், பிரார்த்தனை செய்தல், மன்றாடுதல், உதவி கோருதுல், நேர்ச்சை செய்தல், குர்;பானி கொடுத்தல், பேரச்சம் கொள்ளுதல் இன்னும் பிற அனைத்து வகையான வணக்கக்கங்களையும் அவனுக்கே செய்து அவனையே வழிபடவேண்டும் என நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீதுல் உலூஹிய்யா என்று பெயர்.
இந்த வகை தவ்ஹீதை ஏற்றுக்கொள்வதில் தான் எல்லாக் காலகட்டங்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களை முன்னர் வாழ்ந்த முஷ்ரிக்குகளும், இணை வைப்பவர்களும் நிராகரித்து வந்தனர். இந்த முஷ்ரிக்குகள் இந்த பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து பரிபாலித்து வருபவன் அல்லாஹ்வே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தனர். ஆனால் அவனுக்கே முழு உரிமையான வணக்கங்களை அவனல்லாது பிறருக்கு செய்து வந்தனர்.
அவர்களாகவே பதிய கடவுளர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவைகள் அவர்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கி வைக்கும் என்று அவைகளை வழிபட்டு அல்லாஹ்வால் மன்னிக்கப்படமாட்டாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் செய்த குற்றவாளியாகின்றனர்.
தவ்ஹீது உலூஹிய்யாவுக்கான குர்ஆன் ஆதாரங்கள்: -
அல்குர்ஆன் அத்தியாயம் 27. ஸூரத்துந் நம்லி(எறும்புகள்), வசனங்கள் 59-65 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
27:59 (நபியே!) நீர் கூறுவீராக: ‘எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?’
27:60 அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
27:61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
27:62 கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
27:63 கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ‘ரஹ்மத்’ என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? – அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
27:64 முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.’
27:65 (இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’
ஆகையால் தவ்ஹீது உலூஹிய்யா என்பது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்பி அவனையே வணங்கி வழிபடுவதாகும்.

தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் என்ன?

‘அஸ்மா” என்பதற்கு ‘பெயர்கள்’ என்று பொருள். ‘ஸிஃபாத்’ என்பதற்கு ‘பண்புகள்’ என்று பொருள். எனவே தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுடைய இந்தப் பெயர்களில், பண்புகளில் அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் யாருக்கும் இணைவைக்காமல் இருப்பதாகும்.
அல்லாஹ்வின் பண்புகளில், ஆற்றல்களில் எதையும் மறுக்க கூடாது அல்லது அந்த பண்புகளுக்குள்ள அர்த்தங்களை மாற்றவோ, அல்லது குறைக்கவோ கூடாது. மேலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுடைய படைப்பினங்களான பிறருக்கும் இருப்பதாக எண்ணக் கூடாது. இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிஃபாத் என்று பெயர்.
உதாரணமாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அஸ் ஸமீவு’, அதாவது ‘எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன்’. ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ அல்லது சமாதியில் அடக்க மாகியிருப்பவருக்கோ, அல்லது ஒரு சிலைக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு உரிய இந்தப் பெயரை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பங்களித்தன் மூலம் ‘ஷிர்க்’ என்ற மாபெரும் பாவமாகிய இணை வைத்தலைச் செய்தவராகிறார். (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)
மற்றொரு உதாரணமாக, யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பெயர்களில் ஒன்றாகிய ‘அல் பஷீர்’ அல்லது ‘எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’ என்ற இந்தப் பெயரை, பண்பை அல்லாஹ் அல்லாத ஒரு மனிதருக்கோ, அல்லது இறை நேசருக்கோ, அல்லது கப்ரில் அடக்கமாகி இருக்கும் நல்லடியாருக்கோ, அல்லது ஒரு நபிக்கோ இருப்பதாக எண்ணினால் அல்லது நம்பிக்கை கொண்டால் அவரும் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் இந்த ஆற்றலாகிய அல்லாஹ் ஒருவனே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என்ற பெயரை, பண்பை, ஆற்றலை இணை வைத்தவராகிறாகிறார். இதன் மூலம் அவர் அல்லாஹ்வுக்கு ‘ஷிர்க்’ என்ற மாபெரும் இணைவைத்த குற்றவாளியாகிறார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
இவைகள் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கும் பொதுவான உதாரணங்களாகும்.
ஒருவர் தம் வாயால் வெளிப்படையாக கூறியோ அல்லது வெளிப்படையாக கூறாமல் தமது செயல்களின் மூலமாக அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பெயர்களை, பண்புகளை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதி செயல்பட்டாலும் அவரும் இணைவைத்தவராகவே கருதப்படுவார். (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும்)
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் நம்மில் சிலர் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு அல்லாஹ் அல்லாதவர்களான இறந்தவர்களிடம் அவர்களுடைய கப்ருகளுக்குச் சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ அழைத்து அவர்களிடம் உதவி தேடுகின்றனர். மேலும் இவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடி தங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் எனவும் கூறுகிறார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ‘எங்கிருந்தாலும் கேட்கும் தன்மையும், எங்கிருந்துக் கொண்டும் எல்லாவற்றையும் பார்க்கும் தன்மையும் இருப்பதாக தவறுதலாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள நாகூரில் அடக்கமாகி இருக்கும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களிடம் தமது தேவையைக் கூறி கேட்பதாக வைத்துக் கொள்வோம். இங்கே அவர்
‘எங்கிருந்து அழைத்தாலும் கேட்கக் கூடியவன்’,
‘மனதில் உள்ள இரகசியங்களை அறியக் கூடியவன்’,
‘ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவன்’
என்பன போன்ற இறைவனுக்கு மட்டுமே இருக்கக் கூடிய இந்த பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாஹூல் ஹமீது வலியுல்லாஹ்வுக்கும் உண்டு என்று நம்புகிறார். இதுவும் ‘தவ்ஹீதுல் உலுஹிய்யாவுக்கு’ எதிரன ‘ஷிர்க்’ என்னும் இணை வைத்தலாகும். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திப்போம்.
அல்குர்ஆன் அத்தியாயம் 10, ஸூரத்து யூனுஸ் (நபி), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
10:17 அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் – இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ‘இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ‘வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும்.
அல்லாஹ் நம் அனைவரையும் அவனை மட்டுமே வணங்கக் கூடிவர்களாக ஆக்கி நம் பாவங்களை மன்னித்து சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்.

சுவனத்தென்றல்

0 comments: