Thursday, February 2, 2012

மர்யம்(அலை) அவர்களை நினைவுக்கூற விழா எடுக்கலாமா...?


ஓரிறையின் நற்பெயரால்....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் அன்பியாக்கள், சஹாபாக்கள் போன்று வலிமார்கள் எனப்படுவோரும் உள்ளனர். இப்படியான இறைநேசர்கள் தான் தர்காவில் அடங்கப்பட்டுள்ளனர் என்று சிலரை குறிப்பிட்டு வருகின்றனர். இவ்வலிமார்களைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் அவ்லியாக்கள் என்று குறிப்பிடுகின்றான். அவர்களை நினைவு கூருமுகமாக விழாக்கள் எடுக்கின்றோம் என கூறிவருவோரை பார்க்கின்றோம். அல்குர்ஆனில் கூறுப்படும் அவ்லியாக்கள் என்றால் யார் ..? என்பதினை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
"அல்லாஹுவின் நேசர்கள் " என்றால் யார்?
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அல்குர்ஆனில் "أَوْلِيَاءَ" என்ற வார்த்தை 36 இடங்களில் பயன்ப்படுத்தப்பட்டுள்ளன. "பாதுகாவலர்கள்", "நண்பர்கள்", "நேசர்கள்" என பொருள் படுத்தப்பட்டுள்ளது.
"வலீ" என்ற வார்த்தையின் பன்மைதான் அவ்லியாவாகும். "வலீயுல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர், "அவ்லியா அல்லாஹ்" என்றால் அல்லாஹுவின் நேசர்கள் என்பது பொருளாகும்.
அல்லாஹுவின் நேசர்களின் பண்புகளையும் அவர்கள் யார் என்பதினையும் அல்லாஹ் பின்வரும் வசனங்களின் மூலம் அறிய தருகின்றதைப் பாருங்கள்.
 قُلْنَا اهْبِطُواْ مِنْهَا جَمِيعاً فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம். (2;38)
 يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَى وَأَصْلَحَ
فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (7:35)
أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ ﴿﴾ الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ 
கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை)அஞ்சுவோராக இருப்பார்கள். (10:62,63)
அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள்.மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (2:2,3,4)

யார் அல்லாஹுவின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கைக் கொண்டு, அவன் தூதர்களின் மூலம் காட்டிய நேர்வழியை முழுமையாக பின்பற்றி அல்லாஹுவை அஞ்சி நடக்கின்றாரோ அவரே அல்லாஹுவின் நேசரகளாவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற)நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். அத்தகைய அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ் காட்டிய நேர்வழியை பின்பற்றி நடக்கின்ற அனைவரும் அல்லாஹுவின் நேசர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆறாம் நூற்றாண்டில் இறக்கப்பட்ட வசனங்கள் ஏதோ சில வருடங்களுக்கு முன் வாழ்ந்து மரணித்த சிலரை குறிப்பதாக சொன்னால் இவர்களின் கூற்றை என்னவென்று சொல்வது...!
முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களை பின்பற்றி நடந்தவர்களையும் அல்லாஹ் நேசர்கள் என்றே பின்வரும் வசனங்களில் கூறுகின்றான்.
إِنَّ الَّذِينَ آمَنُواْ وَالَّذِينَ هَادُواْ وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَعَمِلَ صَالِحاً فَلَهُمْ
 أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ 
நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர் களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2:62),(5:69)
அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட  பிரிவினர்    என்று எங்கேயும் அல்லாஹ் சொல்லவில்லை என்பதினை தர்கா வழிபாட்டை செய்கின்றவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ இந்த வசனத்தின் நோக்கம் எல்லோரும் அல்லாஹ்வின் நேசர்களாக மாறவேண்டும் என்பதைப் பற்றிதான் குறிப்பிடுகின்றன என்பதினை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
1. நல்வழியில் செலவிட்டு , நல்லறங்கள் புரிபவர்களுக்கு கூலி உண்டு,
 الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُم بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلاَنِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2:274)
 إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ وَأَقَامُواْ الصَّلاَةَ وَآتَوُاْ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்குஎந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2;277)
2. நல்வழியில் செலவிட்டதை சொல்லிக்காட்டாதவர்களுக்கு கூலி உண்டு
 الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ ثُمَّ لاَ يُتْبِعُونَ مَا أَنفَقُواُ مَنًّا وَلاَ أَذًى لَّهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (2: 261)
3. அல்லாஹுவின் பாதையில் உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு கூலி உண்டு
 فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُواْ بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلاَّ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். (3:170)
4. தூதர்களை நம்பி, தவறை திருத்திக் கொள்வோருக்கு கூலி உண்டு
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلاَّ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (6:48)
5. அல்லாஹுக்கு மட்டுமே அடிப்பணிந்தவருக்கு கூலி உண்டு
 بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِندَ رَبِّهِ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்குஅவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (2: 112)
அல்லாஹ் நேசிக்கின்ற காரியங்களை இன்னும் நிறைய அடிக்கிக்கொண்டே போகலாம் .அல்லாஹுவும், அவனின் தூதர்களும் எந்த வழியை இஸ்லாம் என்று காட்டிதந்தார்காலோ அத்தகைய வழியை பின்பற்றி நடந்தால் தான் நாம் அல்லாஹுவின் நேசர்களாக மாற முடியும்,அல்லாஹ் நேசிக்கின்ற அடியானாக மாற நற்காரியங்களில் போட்டிபோடுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றதைப் பாருங்கள்.
 عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ ﴿﴾ تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ﴿﴾ يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ ﴿﴾ خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர். முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்.போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும். (83:23,24,25,26)

நல்லடியார் என்றால் விழா எடுக்கலாமா..?
பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் உள்ளன. ஒருவரை நல்லவரா..? தீயவர..? என்பதினை அறிய அவரின் வெளிப்படையான செயல்களை வைத்துதான் தீர்மானிக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவர் நற்செயலை வெளிப்படுத்தினால் நல்லவர். அது போல தீய செயலை வெளிப்படுத்தினால் தீயவர்.வெளிப்படையான செயல்களைத் தான் நாம் அறிய முடியுமே தவிர, அவரின் அந்தரங்கதையோ, மனதில் உள்ளதையோ நம்மால் அறிய முடியாது.
இவ்வாறிருக்கும் நிலையில் நாம் எப்படி ஒருவரை இறை நேசர் என தீர்மானிக்க முடியும் என்பதினை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் இறை நேசரா...? என்பதினை அல்லாஹுவே அறிவான். அல்லாஹுவின் நேசர்களின் இறுதி பட்டியல் நாளை மறுமையில் தான் வெளியிடப்படும். ஆனால் இறைவன் தம்முடைய வேதத்தில் இறைத்தூதர்களையும், சில நல்லடியார்களையும் அவர்களின் தூய வாழ்கையை நமக்கு கூறுகின்றான். அத்தகையவர்களை போல நாமும் தியாகம் செய்ய வேண்டும் என்று தான் கூருகின்றானே தவிர, அவர்களுக்கு தர்காக்கள் கட்டி வழிபாடுகள், வான வேடிக்கைகைகள், யானை, குதிரை, ஒட்டகம் ஊர்வலங்கள், ஆடல், பாடல்கள், என விழாக்கள் நடத்த எங்கும் சொல்லவில்லை.

உதாரணத்திற்கு மர்யம்(அலை) அவர்களைப் பற்றி பார்ப்போம்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, (19:16)
 وَإِذْ قَالَتِ الْمَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاء الْعَالَمِينَ
''மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண் களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (3:42)
 وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். (66:12)

நாம் இன்று யாரைலாமோ இறை நேசர் என்று கூறி கொள்கின்றோம். ஆனால் அல்லாஹுவோ நம்பிக்கை கொண்டோருக்கு உதாரணாமாக மர்யம்(அலை) அவர்களை நமக்கு கூறுகின்றான். நல்லடியார்களுக்கு கொடியேற்றி விழா எடுக்கணும் என்றிருந்தால் நாம் முதலில் இவர்களுக்கு தான் எடுக்கணும்.
யாராவது கூறுவார்களா...? மர்யம்(அலை) அவர்களை நினைவு கூறுவதற்காக அவர்களுக்கு ஆலயத்தை எழுப்பி, கொடியேற்றி விழாக்கள் எடுத்து வழிபாடு நடத்துவதற்கு. அவர்கள் கூறமாட்டார்கள் ஏன் என்றால் மர்யம்(அலை) அவர்களுக்கு வழிபாடு நடத்திய நஸரானிகளை தான் அல்லாஹ் வழிதவரியவர்கள் என்று கூறியுள்ளானே.
நஸரானிகள் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆலையம் கட்டி வழிபாடு மற்றும் கொடியேற்றி விழாக் கொண்டாடுகின்றார்கள்.  நஸரானிகள் செய்தால் அது இணைவைப்பு, அதே முஸ்லிம் என்று பெயர் வைத்து தர்காக்கள் கட்டி  வழிபாடு மற்றும் கொடியேற்றி விழாக் கொண்டாடினால் அது ஏகத்துவமா...? நபிவழியா....? என்னே மதியீனம்.
சூரத்துல் பாத்திஹாவில் நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. என்று ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்தனை செய்துவிட்டு, வழிதவரிய நஸரானிகளின் வழிமுறையை பின்பற்றி நடந்தால் என்ன என்று கூறுவது. பின்வரும் நபிமொழி
நம் நடைமுறையை ஊர்ஜீதப்படுத்துவதைப் பாருங்கள்.
"நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்" என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) "அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். நூல்: ( புஹாரி 3456)

அல்லாஹுவின் நேசத்தை பெற எளிய வழி இதோ பாருங்கள்...
 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
 لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அல்குர்ஆன் 33:21)
அன்பார்ந்த அல்லாஹுவின் நல்லடியார்களே! அல்லாஹுவின் நேசத்தை பெறுவதற்காக ஆண்டுக்கணக்கில் தவம் இருந்து சிரமப்பட தேவையில்லை. இரவு முழுக்க ஒற்றை காலில் நின்று வணங்கத் தேவையில்லை, முறையாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நடந்து அல்லாஹுவின் நேசத்தை பெற்று நாம் உயர்ந்த சுவனத்தை பெறுவோமாக!
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Reference:

0 comments: