Sunday, December 4, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!





ஓ துறவிகளின் அரசரே; 

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே; 

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள் 

எல்லைகளைத் தாண்டி வாருங்கள் 

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் 

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள். 

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், 'உருவாகு' என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது ('உருவாகிவிட்டேன்' என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார் 

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார் 

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம். 

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்; 

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்; 

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்; 

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே; 

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை 

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்? 
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை; 
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள். 

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள். 

-நன்றி: மொழியாக்கம் ராஜேஸ்


இந்த பாடலை கேட்டு விட்டு சகோதரர் ராஜேஸ் அவர்கள் பின்வருமாறு தனது பதிவில குறிப்பிடுகிறார்.

//நான் உணர்ச்சிவசமெல்லாம் படவில்லை. ஆழ்ந்து யோசித்துத்தான் சொல்கிறேன். ஏற்கெனவே, ரஹ்மானின் பிற சூஃபி பாடல்களைக் கேட்கும்போதே ('பியா ஹாஜி அலி', 'கரீப் நவாஸ்', 'அர்ஸியான்'), இஸ்லாத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தேன். இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இந்த அளவு இறைவன் என்ற ஆளுமையிடம் தன்னை முழுமையாக ஒப்புவிக்கக்கூடிய அளவு அமைந்த உருக்கமான, கேட்டதும் ஒருவித அமைதியளிக்கக்கூடிய பாடல்களை, எனக்குத் தெரிந்து வேறெந்த மதத்திலும் கேட்டதில்லை.//- -ராஜேஸ்



“ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”


3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.


குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது. 

//ஓ துறவிகளின் அரசரே; 

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே; 

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள் 

எல்லைகளைத் தாண்டி வாருங்கள் 

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

இந்த பாடல் இறைவனைத்தான் குறிக்கிறது என்றால் அதை ஒரு தர்ஹாவில் அமர்ந்து பாட வேண்டியதில்லை. அடுத்து இறைவனை நெருங்குவதற்கு இது போன்ற பாடல்களை பாடச் சொல்லி முகமது நபி நமக்கு கற்றுத் தரவில்லை. முகமது நபியின் அடக்கத்தலத்தில் இது போன்ற பாடல்கள் பாடப்படுவதில்லை.

பிராரத்தனை வணக்கம் அனைத்துமே இறைவன் ஒருவனுக்குத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதற்கு மாற்றமாக நீங்கள் எந்த முறையைக் கொண்டு வந்தாலும் அது இறைவனால் நிராகரிக்கப்பட்டு அதற்கு தண்டனையும் கொடுக்கப்படுவதாக குர்ஆன கூறுகிறது.

எனவே சகோ ராஜேஸ் உணரச்சிவசப்பட்டு ரஹ்மானின் பாடலைக் கேட்டு இஸ்லாத்துக்கு வர வேண்டாம். பாடல் சலிப்பு தட்டி விட்டால் இஸ்லாமும உங்களுக்கு சலிப்பாக தோன்றும். எனவே குர்ஆனின் தமிழ் அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புகளை வரிக்கு வரி தொடர்ந்து படித்து வாருங்கள். இது இறைவனின் வேதம்தான் என்ற முடிவுக்கு வந்தவுடன் பிறகு இஸ்லாத்துக்கு வருவதைப் பற்றியதான முடிவை எடுங்கள். 

உஙகளுக்கு மனம் அமைதியுற குர்ஆனின் வாசிப்பை ராகத்தோடு இசைக் கருவி இல்லாமல் கேட்டு வாருங்கள். உங்களின் உள்ளம் உண்மையாகவே ஈர்க்கப்படுவதை உணருவீர்கள். கீழே உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள்.




ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.

//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை. 

முஸ்லிம்களில் கூட பக்கீர்கள் என்ற ஒரு கூடடம் உழைக்காது இது போன்ற பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டு திரிவதை பரவலாக பார்க்கலாம். இதை முற்றிலுமாக இஸ்லாம் தடுக்கிறது. நபியாகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த முகமது நபி தனது வருமானத்திற்கு ஒரு ஆட்டுப் பண்ணையை சொந்தமாக வைததிருந்தார். வியாபாரமும் செய்தார். இவர்களைப் போல் புரோகிதத்தை வளர்க்கவில்லை.

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!

ரஹ்மான் சார்! தர்ஹா வணக்கத்தில் மூழ்கியிருந்த மக்களை குர்ஆனின் பக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறோம். இசையை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள. நீங்கள் நன்மை என்று நினைத்து ஒழிந்து போன சூஃபி பாடல்களையும் தர்ஹா வணக்கங்களையும் மறு பிரவேசம் பண்ண வைத்து விடாதீர்கள். நீங்கள் ஹஜ்ஜூக்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். இங்கு ஒரு தர்ஹாவையாவது பார்த்ததுண்டா? முகமது நபி அடக்கததலத்தில் ஏதேனும் வணக்கங்கள் நடைபெறுவதை பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! எனவே குர்ஆனை மேலும் ஆழ்ந்து படியுங்கள. உண்மையான இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதுதான் உங்களின் இரு உலக வாழ்க்கையையும் செம்மைப்படுத்தும்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான.'
-குர்ஆன் 4:48



0 comments: