Sunday, December 4, 2011

அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர். (93 - 118)


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

அத்தியாயம் :  அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர். (93 - 118)

இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.



23.93, 94. 'என் இறைவா! அவர்களுக்கு எச்சரிக்கப்படுவதை (வேதனையை) எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!' என்று (முஹம்மதே!) கூறுவீராக!26


23.95. அவர்களுக்கு நாம் எச்சரிப்பதை உமக்குக் காட்டுவதற்கு நாம் ஆற்றலுடையவர்கள்.


23.96. நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.


23.97. 'என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவீராக!

23.98. 'என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' (என்றும் கூறுவீராக!)


23.99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது 'என் இறைவா!   நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26

23.101. ஸூர் ஊதப்படும் போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரை யொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.


23.102. எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர்.


23.103. எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே இழப்பை   ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்.


23.104 . அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

23.105. 'எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருக்கவில்லையா?' (என்று கூறப்படும்).


23.106. 'எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்' என்று கூறுவார்கள்.


23.107. 'எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்' (என்றும் கூறுவார்கள்).


23.108. 'இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!' என்று அவன் கூறுவான்.


23.109. 'எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்' என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.


23.110. 'எனது நினைவை விட்டும் உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலிப் பொருளாகக் கருதினீர்கள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்' (என்று இறைவன் கூறுவான்.)

23.111. 'அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர்' (என்றும் இறைவன் கூறுவான்.)


23.112. 'ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?' என்று (இறைவன்) கேட்பான்.


23.113. 'ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!' என்று அவர்கள் கூறுவார்கள்.


23.114. 'குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?' என்று அவன் கூறுவான்.


23.115. உங்களை வீணாகப் படைத்துள்ளோம்' என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள்' என்றும் நினைத்து விட்டீர்களா?


23.116. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) கண்ணியமிக்க அர்ஷின் அதிபதி.

23.117. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.


23.118. என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன்' என கூறுவீராக!

0 comments: