Monday, September 17, 2012

விமர்சனங்களை வென்ற மாமனிதர் - 1

கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்) பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப்படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது என்ற பெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.
முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.
முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.
வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.
இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.
மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)
ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.
தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.
ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.
முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும்பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.
முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.
முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.
மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.
கோவை அப்துல் அஜீஸ் பாகவி 


0 comments: