Friday, October 22, 2010

சுவனத்தின் வர்ணனை



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG
நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:133

அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

''நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.'' (54:54,55.)


http://ipcblogger.net/musawir/files/2010/07/paradise.jpg
 

இவ்வுலகில் வாழ்கின்ற  நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

சுவனத்து இன்பங்கள் பற்றி எடுத்துரைக்கும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் வந்துள்ளன!

அல்லாஹ் கூறுகிறான்: பயபத்தியாளர்களுக்காக வாக்களிக் கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில்,  அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிரந்தரமானவை. அதன் நிழலும் நிலையானது! (13 : 35)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 'பயபக்தியாளர்களுக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் உன்னதத்தன்மை என்ன வெனில், அதில் தூய்மையான நீராறுகளும் சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும் குடிப்பவாகளுக்குச் சுவையூட்டும் மது ஆறுகளும் சுத்தமான தேனாறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் அங்கே அவர்களுக்கு எல்லா விதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடம் இருந்து மன்னிப்பும் கிடைக்கும். (47 : 15)

வேறோரிடத்தில் கூறுகிறான்: மேலும் (நபியே, இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு- கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயம் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக! அங்கு ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும்போதெல்லாம் - அக்கனிகள் பூமியின் கனிகளுக்குத் தோற்றத்தில் ஒத்திருப்பதால் - இத்தகைய கனிகள்தாம் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும் அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்' (2 : 25)

'சுவனத்தின் நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்திருக்கும். மேலும் அதன் கனிகள் எப்போதும் (விருப்பப்படி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்கள் அருகில் இருக்கும். வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். அதன் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பி இருப்பார்கள். அந்தக் கிண்ணங்களில் இஞ்சிச் சுவை கலந்த பானங்கள் அவர்களுக்கு அங்குக் குடிப்பதற்கு வழங்கப்படும். அது சுவனத்திலுள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ஸல்ஸபீல். மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழி யம் புரிவதற்)காகச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெறித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்! அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிரைந்திருப்பதையும் மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்' (76:14-20)

மற்றோர் இடத்தில், (வேறு சில முகங்கள்) உன்னதமான சுவனத்தில் இருக்கும். அவை அங்கு வீணானவற்றைச் செவியுறமாட்டா. ஓடிக் கொண்டிருக்கும் நீருற்று அங்கு உண்டு. உயர்ந்த கட்டடில்கள் அங்கிருக்கும். கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். தலையணைகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்(88:10-16)

இன்னோர் இடத்தில், 'எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்குத் தங்கக்காப்புகளும் முத்துக்களும் அணிவிக்கப்படும். பட்டு அங்கு அவர்களின் ஆடையாக இருக்கும்' (22 : 23)

'அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது' (76 : 13)

மென்மையான மற்றும் கனமான பச்சை நிறப்பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும் அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானம் புகட்டுவான் (76 : 21)

(அந்தச் சுவனவாசிகள்) பச்சைக் கம்பளங்களிலும் விலை மதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணை வைத்து சாய்ந்திருப்பார்கள். (55 : 76)

இறையச்சம் உடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள். தோட்டங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகள் அணிந்து எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இதுவே அவர்களின் வெற்றி. மேலும் நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம். அங்கு அவர்கள் மனநிம்மதியுடன் எல்லாவித சுவையான பொருட்களையும் கேட்பார்கள் (44 : 51-55)

செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! (என்று அவர்களிடம் சொல்லப்படும்) (43 : 70)

இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் எந்த ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்! உங்கள் இறைவனின் எந்தெந்த வெகுமதிகளைப் பொய்யென்பீர்கள்? அந்தப் பெண்கள் அழகு மிக்கவர்களாய் இருப்பார்கள். மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! (55 : 56-57)

இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும் பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளைப் பொய்யெனக் கூறுவீர்கள்? கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட எழில்விழி மங்கைகள்' (55 :70-72)

அவர்களுடைய செயல்களின் பயனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்! (32:17)

எவர்கள் நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) மிக அழகிய நன்மையாகும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அதில் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்' (10: 26)



சுவர்க்கத்தில் படித்தரங்களுண்டு
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:  நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. இறைவழியில் போர் புரியும் வீரர்களுக்காக அல்லாஹ் அவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே உள்ள தூரம்,  வானம்-பூமியின் தூரம் போன்றதாகும். நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவதாயின் ஃபிர்தௌஸை கேட்டு இறைஞ்சுங்கள்! திண்ணமாக அது சுவனத்தின் நடுவிலும் சுவனத்தின் உச்சியிலும் உள்ளது. அங்கிருந்துதான் சுவனத்தின் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதன் மேலே கருணைமிக்க இறைவனின் அர்ஷ் உள்ளது' (நூல் : புகாரி)


அபூ ஸயீதுல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் தங்களுக்கு மேலே பால்கனிகளில் இருப்போரைக் காண்பார்கள். கிழக்கு அல்லது மேற்கின் அடிவானத்தில் இலங்கக்கூடிய ஒளிரும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள்! அது அவர்களின் படித்தரத்தின் ஏற்றதாழ்வினாலாகும்'

தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவை நபிமார்களின் அந்தஸ்துகளாயிற்றே! அவர்களல்லாதவர் யாரும் இவற்றை அடைந்திட முடியாதே! அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: சரிதான்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருக்கும் இறைவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு ரஸூல்மார்களை உண்மைப்படுத்தினார்களோ அவர்களும் இவற்றை அடைவார்கள்' (புகாரி)



சுவர்க்க வாழ்வு
என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது' என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)



நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு
சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், "நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)


சுவர்க்க வாயில்கள்
நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; 'ஆம்' அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

"நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

"விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்" என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை
சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை
அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; 'ஸலாமுன்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை 'ஸலாமுன்' என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

இறைநம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் ஹூருல் ஈன்கள்.
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;  அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,  வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  (அல்குர்ஆன் 56:35-38)
 

ஒரே வயதுள்ள கன்னிகளும்.  (78:33)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர் (55:72)

ஹூருல் ஈன்கள் அழகிய நெடிய கண்களையுடையவர்கள் ஆவார்கள்: -

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

அவர்கள் வெண்முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

http://ipcblogger.net/musawir/files/2010/07/363.jpgசொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும். ஆதாரம்: புகாரி.

சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்
அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

பசி, நிர்வாணம், தாகம்,வெயில் இருக்காது“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118)
“இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்). (20:119)
எச்சில் துப்பவோ, மலஜலம் கழிக்கவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள்!
ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்தில் உண்பார்கள்., பருகுவார்கள்! ஆனால் எச்சில் துப்பமாட்டார்கள்., மலஜலம் கழிக்க மாட்டார்கள். மூக்கு சிந்தமாட்டார்கள்! தோழர்கள் கேட்டார்கள்: அப்படியானால் உணவின் நிலை என்ன? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஒரு ஏப்பம் வரும்., வியர்வை வெளிப்படும்! அவ்வளவுதான்! அந்த வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! மூச்சு விடுவது போன்று -அல்லாஹ்வைத் துதிப்பதற்கும் புகழ்வதற்கும் அவர்களுக்கு உள்ளுதிப்பு அளிக்கப்படும்'(முஸ்லிம்)


சுவர்கத்தின் கட்டட அமைப்பு
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின்தூதரே! சுவனத்தைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அதன் கட்டட அமைப்பு எத்ததையது? அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: செங்கற்கள் தங்கம் - வெள்ளியினால் செய்யப்பட்டவை., அதன் பூச்சு கஸ்தூரியாகும். அதன் கற்கள், முத்து - மாணிக்கத்தினால் ஆனவை., அதன் மணல் குங்குமமாகும். சுவனத்தினுள் பிரவேசித்தவர் இன்பத்தில் திளைத்திருப்பார். சங்டத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்., நிரந்தரமாக வாழ்வார். என்றைக்கும் மரணம் அடையமாட்டார்! அவருடைய ஆடைகள் கந்தலடையமாட்டா! அவரது இளமை என்றைக்கும் முடிவடையாது' (நூல்: முஸ்னத் அஹ்மத்,  திர்மிதி)

இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் வழங்கப்படும் கூடாரம்.
அபூ மூஸா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் ஒரு கூடாரம் உள்ளது. நடுப்பகுதி ஒரு காலி முத்தினால் அமைந்ததாகும் அது! வானத்தில் அதன் நீளம் அறுபது மைல்களாகும். இறைநம்பிக்கையாளனுக்கு அங்கு மனைவியர் இருப்பர்;. அவர்களிடம் அவன் போய்வந்து கொண்டிருப்பான். அவர்கள் சிலர் வேறு சிலரைக் காண முடியாது' (நூல்:புகாரி,  முஸ்லிம்)


இறைநம்பிக்கையாளனுக்கு நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும்.ஜைத் பின் அர்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எந்த இறைவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு சுவனவாசிக்கு உண்பது,  பருகுவது, உடலுறவு கொள்வது, ஆசைப்படுவது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும். அவர்களின் இயற்கைத் தேவை என்பது வியர்வையாகி மேனிகளின் வழியாக வெளியேறும்! அது கஸ்தூரி மணம் போன்று கமழும்! அவர்கள் வயிறு ஒட்டியிருக்கும்'  (முஸ்னத் அஹ்மத், நஸஈ).
(முன்திரி அவர்கள், அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் எனும் நூலில் கூறியுள்ளார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் ஹதீஸில் ஆதாரப்பூர்வமாய் ஏற்கப்படுபவர்களாய் உள்ளனர். இமாம் தபரானியும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடர் கொண்டு இதனை அறிவித்துள்ளார்கள். இப்னு ஹிப்பானும் ஹாகிமும் கூட அறிவித்துள்ளார்கள்.)

சுவனவாசிகளின் அழகை பிரகாசிக்க செய்யும் அங்காடி.
அனஸ்(ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தில் அங்காடி ஒன்றுள்ளது. சுவனவாசிகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அங்கு வருவர். தென்றல் காற்றடித்து அவர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் புழுதி வாரிப்போடும். அதனால் அவர்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெறுவார்கள். தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்கள். மேலும் அவர்களிடம் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் வெளியே சென்ற பிறகு நீங்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்று விட்டீர்கள் என்று! அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களும் தான் இங்கிருந்து சென்ற பிறகு அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்றுள்ளீர்கள்' (நூல்: முஸ்லிம்)


சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து,  நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)
 
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்'  (32 : 17)


அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: 


சுவனவாசிகளிடம் அல்லாஹ் கூறுவான்:'எனது உவப்பை உங்களுக்கு நான் அருளுகிறேன்! இனி ஒரு போதும் உங்களின் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்'

யா அல்லாஹ்! உன்னுடைய சுவனங்களில் நிரந்தரமாகத் தங்கி வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! அங்கு உனது உவப்பை எங்கள் மீது அருள்வாயாக! உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!


1 comments:

assalaamu alaikum.
Payanulla thakaval.