Monday, February 13, 2012

காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் !


வருடா வருடம் இந்த பிப்ரவரி 14 ம் தேதி வந்தால் போதும், காதலர் தினம் என்ற போர்வையில் கலாச்சார சீரழிவு பல்வேறு அரங்கேற்றம் ஆகின்றது. இந்த காதலர் தினம் இன்று பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக ஆகிவிட்டது. இளைய தலைமுறைகள் இங்கிதம் இல்லாமல் இதயங்கள் ஊனம் பெரும் இருட்டு தினம். இந்த தினம் கிருத்துவ போதகர் வாலண்டைன் என்பவர் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது. இந்த தினத்தை வணிகமயமாக்குவதர்க்கு மேற்கத்திய நாடுகள் காதலர் தினமாக கொண்டாடுகின்றது. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தினத்தில் தான் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் இஸ்லாம் கூறும் முறையே தனி.ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க விரும்பினால் அந்த பெண்ணின் பொறுப்பாளரிடம் போய் பேசி மணம் முடித்துக்கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
இந்த தினத்தின் தாக்கம் மக்கள் மேல் ஏற்படுவதற்கு மீடியாக்களும் ஒரு முக்கிய காரணம். இந்த தினத்தில் காதலை ஊக்கப்படுத்தும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகள் தயாரித்து இளைஞர்களின் மனதில் காதல் உணர்வு என்ற பெயரில் காம உணர்வுகளை ஊக்குவிக்கின்றனர். இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் என்ற சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு காரணம், இந்த அசிங்கத்தை பற்றிய விழிப்புணர்வும், இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவு பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இல்லாமையே.
"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
ஆகவே இஸ்லாத்திற்கும் இந்த பாவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு தான் மணமுடிக்கும் பெண்ணை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ரசூல்(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முகீரத் இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்" என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கும் அவலம் ஏற்படுகின்றது. நமதூரிலும் இது போன்ற சம்பவங்களை நாம் கேட்டு நம் மனம் பதறியதும் உண்டு. பள்ளியில் படிக்கும் பெண்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் அந்நிய மதத்தை சார்ந்தவருடன் ஓடி போவதும், அதை சமூகம் ஒரு செய்தியாக மட்டுமே எடுத்துக்கொள்வதும் எந்த வகையிலும் நாம் இதை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதற்கு ஒரு முடிவு கட்ட நமதூரில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் முன் வரவேண்டும். ஆங்காங்கே நமதூர் சிறுவர் சிறுமியர்களுக்கு அவர்களது இள வயதிலேயே தர்பியா வகுப்புகள் மற்றும் இஸ்லாமிய நெறி வகுப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படவேண்டும். இந்த காதலின் தீங்கை பற்றியும் அதனால் ஏற்படும் அல்லல்கள் பற்றியும் அவர்களுக்கு இஸ்லாம் கூறும் முறையில் எடுத்துக்கூறவேண்டும்.
கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.
"தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 24:30-31)
மேற்கத்திய கலாச்சாரத்தில் இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர் சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம். சீ நாணங்கெட்ட கலாச்சாரம். அப்படியொரு கலாச்சாரத்தை தகர்த்து தவிடு பொடியாக்கவேண்டும். அப்படியொரு கலாச்சாரம் இந்திய காலாச்சராமும் அல்ல. இஸ்லாமிய கலாச்சாரமும் அல்ல. மாறாக விரட்டப்பட்ட ஷைத்தானின் கலாச்சாரம். இஸ்லாமிய கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் மேற்கத்திய கலாச்சராம்.
பெற்றோர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பது. நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை சீர் கெடுக்கின்றது. சீரிய சிந்தனை ஓட்டத்திற்கு தடை விதிக்கின்றது. ஒரு அந்நிய ஆணும் ஒரு அந்நிய பெண்ணும் சந்தித்து பேசிக்கொள்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நேரில் சந்தித்து பேசுவதானால் சமூகத்தின் கண்ணுக்கு ரொம்பவே பயப்படுவார்கள். ஆனால் இந்த செல்போன் அதற்கும் வழிவகுத்துவிடுகின்றது. மறுமுனையில் அந்நிய பெண்ணுடனோ அல்லது அந்நிய ஆணுடனோ காம உணர்சிகளை தூண்டும் விதத்தில் பேசுவது. இது செல்போனா அல்லது செக்ஸ்போனா என்று நமக்கே சந்தேகம் வரும் படி பேசி தீர்த்து விடுகிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிகொடுத்தால் அதை உங்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண்காணித்து கொள்ளவேண்டும்.
ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு இளைஞர் தன் அக்காவையோ அல்லது தங்கையய்யோ வேறு எவனும் காதலித்தால் முதலில் சண்டைக்கு வருகிறான். அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
மேலும் இந்த நாளில் கல்யாணம் முடித்த கணவன் மனைவியும் "ஹாப்பி வாலண்டைன் டே" என்று கூறிக்கொள்வதும், மாப்பிள்ளை பெண் என்று பேசி வைத்தவர்களும் தங்களுக்குள் இவ்வாறு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதும் இஸ்லாமிய காலாச்சாரமே இல்லை. இவ்வாறு பரிமாறி கொள்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும். இப்படி பரிமாறிக்கொள்ளும் நீங்கள், உங்கள் பிள்ளைகள் இவ்வாறு காதலில் ஈடுபட்டால் அனுமதிப்பீர்களா ? நிச்சயமாக அனுமதிக்க மாட்டீர்கள். எதற்கு இந்த முனாபிக் தனம். எனவே சிந்தித்து பாருங்கள். இஸ்லாம் கூறும் வழிமுறையில் உங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்.
கன்னியர்க்கு கண்ணிவெடியாகவும், காளையர்க்கு கள்ளுக்குடியாகவும், பெற்றோருக்கு பேரிடியாகவும் இருக்கும் இந்த காதலை தவிர்ப்பீர். காதலர் தினத்தை புறக்கணிப்பீர். இந்த பாவத்திலிரிந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருவீர். இஸ்லாம் கூறும் குடும்பத்தை அமைப்பீர். இஸ்லாமிய சமுதாயம் தழைத்திட துணைபுரிவீர்.



0 comments: